
அம்பேத்கர் வழியில் பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என்று நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது!” என்று கற்பித்த புரட்சியாளர்!
“அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்களைத் தேடி ஓடிவரும்!” என்ற பேரறிஞர்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை!
“நான் யாருக்கும் அடிமை இல்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை!” என்று முழங்கிய சமத்துவ நாயகன்!
“சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது!” என்ற புரட்சியாளர் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை!
இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அம்பேத்கர் திகழ்கிறார்.
பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு தாழ்தளத்தில் வீழ்ந்துகிடக்குற தமிழ்தேசிய இனப் பிள்ளைகள் உலகங்கெங்கும் மானுட விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வழியிலே எம்மின விடுதலைக்கான அரசியல் புரட்சியை முன்னெடுக்கிறோம்.
சாதி-மதப் பிளவுகள்தான் சமநிலைச் சமூகம் அமையவிடாது ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் தன்னினப்பகையை மூட்டி அந்த தேசிய இனங்களைப் பிரித்தாண்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்!. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.