தமிழகத்தில் மன்னராட்சி ஒழிக்கப்படவேண்டும் என விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அம்பேத்கர் புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசியது தொடர்பாகக் கருத்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.
எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நேற்று (டிச. 12) நடைபெற்றது. இதில், அம்பேத்கரின் பேரனும் சமூக செயற்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே, முன்னாள் நீதிபதி சந்துரு, தவெக தலைவர் விஜய், விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ஆதவ் அர்ஜுனா, “2026 தேர்தலில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும். பிறப்பால் அனைவரும் சமம் என்ற கருத்தியலை அம்பேத்கர் உருவாக்கியதைப் போல பிறப்பால் ஒரு முதல்வர் இங்கு உருவாக்கப்படக் கூடாது. தமிழகத்தை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆளவேண்டும்” என்று பேசியிருந்தார். மேலும், தவெக தலைவர் விஜய்யும் திமுகவை விமர்சித்துப் பேசியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து, விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா பேசியது குறித்து இன்று கருத்து தெரிவித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ”நான் சினிமா செய்திகள் பார்ப்பதில்லை” என்று கூறினார்.
மேலும், மன்னராட்சி என ஆதவ் அர்ஜுனா பேசியது தொடர்பாகக் கேட்கப்பட்ட கேள்விக்கு, “யார் பிறப்பால் முதல்வர் ஆனது? மக்கள் தேர்ந்தெடுத்துதான் முதல்வர் ஆகிறார்கள். அந்த அறிவுகூட இல்லை அந்த ஆளுக்கு” என பதிலளித்தார்.