
ஆதவ் அர்ஜூனா விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் நெருக்கடியும் இல்லை என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
ஃபென்ஜால் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விசிக சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை தொல். திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார்.
சமீபத்தில் சென்னையில் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, 'தமிழகத்தில் மன்னராட்சி நடக்கிறது, அதனை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்' என்று சர்சைக்குரிய வகையில் கூட்டணியில் உள்ள திமுக குறித்துப் பேசியிருந்தார். இது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் இருந்து 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்து கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக அவர், முதல்வர் மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசியுள்ளார்.
தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் அலுவலத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு சிறப்பு மலர் வெளியீட்டு விழாவில் திருமாவளவன் கலந்துகொண்டார்.
இதையும் படிக்க | விசிக ஆதவ் அர்ஜூனா இடைநீக்கம்!
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன்,
'ஃபென்ஜால் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விசிக சார்பில் ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினோம்.
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, அண்மை காலமாக பல்வேறு நிகழ்வுகளில் அல்லது சமூக ஊடகங்களில் தன்னுடைய கருத்துகளை பதிவிட்டதன் மூலம் கட்சியின் நன்மதிக்கும் நம்பகத் தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு சூழல் உருவானது. அதுகுறித்து தொடர்ச்சியாக அவரிடம் அறிவுறுத்தல் செய்தோம். எனினும் அண்மை நிகழ்வின் அவரது பேச்சு கட்சியின் நன்மதிக்கும் தலைமையின் நம்பகத் தன்மைக்கும் எதிராக அமைந்தததால் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்திருக்கிறோம். அவர் இதற்கு விளக்கம் தருவதற்கான நேரம் இருக்கிறது. பலமுறை அவருக்கு வாய்வழியாக எச்சரிக்கை கொடுத்திருக்கிறோம். அவசர நடவடிக்கையாக இதனைச் செய்திருக்கிறோம்.
இதையும் படிக்க | முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு!
இந்த விவகாரத்தில் திமுக தரப்பில் இருந்து எங்களுக்கு எந்த அழுத்தமும் நெருக்கடியும் இல்லை. அவர்கள் அதுபற்றி பேசவும் இல்லை.
விஜய் கலந்துகொண்ட விழாவில் நான் பங்கேற்காதது சுதந்திரமான முடிவு. விசிகவுக்கும் தவெகவுக்கும் எந்த மோதலும் இல்லை. விஜய்யுடன் சர்ச்சையோ சிக்கலோ ஏற்பட்டது இல்லை.
ஆனால் அவருடன் ஒரே மேடையில் பங்கேற்றால் எங்களது கொள்கை பகைவர்கள், எங்களது வளர்ச்சியை விரும்பாதவர்கள், எங்களை வீழ்த்த வேண்டும் என்று விரும்புபவர்கள் அதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி கதை கட்டுவதற்கு வாய்ப்பு இருப்பதால் முன் உணர்ந்து எங்கள் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் எடுத்த முடிவு. அவரோடு நிற்பதை வேறெந்த கோணத்திலும் நாங்கள் தவறாக அணுகவில்லை. எனவே அவரை வைத்தே புத்தகத்தை வெளியிடலாம் என்று குறிப்பிட்ட ஊடக நிறுவனத்துக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டோம்.
நூல் வெளியீட்டு விழாவிற்கு முன்னதாக ஆதவ் அர்ஜூனாவிடம் நான் பேசினேன். 'நீங்கள் தாராளமாக இந்த விழாவில் கலந்துகொள்ளுங்கள். அம்பேத்கர் பற்றி பேசுங்கள், நூலின் பின்னணி பற்றி பேசுங்கள். அரசியல் பேச வேண்டாம்' என்று வழிகாட்டுதல்களைக் கூறினேன். ஆனால் அவர் பேசிய பேச்சு விசிகவின் நம்பகத் தன்மையை நொறுக்கும் அளவுக்கு அமைந்துவிட்டது.
மாற்றுக் கட்சியினர் ஒரே மேடையை பகிந்துகொள்ளலாம். ஆனால் தமிழ்நாட்டில் அந்தமாதிரியான ஒரு சூழல் இல்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.