
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்துக்கு நாளையும் நாளை மறுநாளும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து மேற்கு - வடமேற்கு திசையில் தமிழகம் நோக்கி நகரும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க.. இன்று பூமியை கடந்து செல்லும் விமான அளவுள்ள விண்கற்கள்! ஆபத்தா?
இது தமிழக கடற்கரையை நோக்கி அடுத்த 2 நாள்களில் நகரக் கூடும் என்றும், மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இது ஏற்கனவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக தெற்கு வங்கக் கடலில் நிலவி வந்த நிலையில், தற்போது காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இதனால், தமிழக கடலோர மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் ஆனால், தற்போதைக்கு இது புயலாக மாறுமா என்பது குறித்த எந்தத் தகவலையும் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிடவில்லை.
அதேவேளையில், இது தமிழகத்தை நோக்கி நெருங்கி வர வர, கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும், குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் 17, 18ஆம் தேதி தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் நகர்வைப் பொறுத்து கனமழை பெய்யும் இடங்கள் மாறுபடலாம் என்றும், உள்ளூர் மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்யவே வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.
முன்பு உருவான புயல் சின்னங்களைப் போலவே, இது கணிக்கப்பட்டதைக் காட்டிலும் தாமதமாகவே காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகியிருப்பதால், அடுத்தடுத்த நகர்வுகளை துல்லியமாக கணித்தே நிலவரங்களை வெளியிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.