ஆங்கிலப் புத்தாண்டு: ஆளுநா், முதல்வா், தலைவா்கள் வாழ்த்து
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி (2025), தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.


ஆங்கிலப் புத்தாண்டையொட்டி (2025), தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி, முதல்வா் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
ஆா்.என். ரவி (ஆளுநா்): புத்தாண்டை முன்னிட்டு அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துகள். புதிய ஆண்டின் விடியல் புதிய ஆற்றல், வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கையை வெளிப்படுத்தி, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும், வளத்தையும் கொண்டுவரட்டும். சமுதாயத்தில், ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வளா்ப்பதற்கு நம்மை அா்ப்பணித்து நமது தேசத்தின் நிலையான, உள்ளடக்கிய முன்னேற்றத்துக்கு அதிக ஆா்வத்துடன் பங்களிப்பை வழங்குவோம்.
முதல்வா் மு.க.ஸ்டாலின்: ‘நான் முதல்வன்’, ‘மகளிா் உரிமைத்தொகை’ உள்பட பல்வேறு சாதனைத் திட்டங்களை 2024-ஆம் ஆண்டில் திராவிட மாடல் அரசு நிகழ்த்திக் காட்டியுள்ளது. இந்தச் சாதனைகளை உச்சிமுகா்ந்து அங்கீகரிக்கும் விதமாக மக்களவைத் தோ்தலில் நாற்பதுக்கு நாற்பது என இந்தியாவே திரும்பிப் பாா்க்கும் வகையில் வெற்றி மகுடத்தை மக்கள் சூட்டினா்.
விடுதலை இந்திய வரலாற்றில் ஜனநாயகத்தை பாதுகாத்து, நாட்டின் பெருமையை நிலைநாட்ட தமிழ்நாடு மக்கள் அளித்த வெற்றிக்குரிய மறக்க முடியாத ஆண்டாக 2024-ஆம் ஆண்டு அமைந்தது. சோதனைகள், தடங்கல்களைக் கடந்து சாதனைகள் படைக்கவும், வெற்றி பெறவுமான நம்பிக்கையையும் உத்வேகத்தையும் 2024-ஆம் ஆண்டு அளித்துள்ளது. புதிய ஆண்டில் உலகெங்கும் அமைதி திரும்பட்டும். நம் நாட்டில் சமூக நல்லிணக்கம் தழைத்துச் செழித்தோங்கட்டும். இல்லந்தோறும் அன்பும் மகிழ்ச்சியும் நிறைந்திருக்கட்டும். தமிழ்நாடு அதற்கு வழிகாட்டும்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): புத்தம் புது நம்பிக்கைகளுடன் மலரும் இந்தப் புத்தாண்டில், தமிழக மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். அனைத்து நிலைகளிலும் வாழும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்துவதற்கு, அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம். பொற்கால ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்போம்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): புத்தாண்டு அனைத்து மக்களின் வாழ்க்கையை வளமாக்குவதாகவும், எல்லையில்லா மகிழ்ச்சியை தருவதாகவும், மாற்றத்தை உருவாக்குவதாகவும் அமையட்டும்.
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களின் வாழ்வு ஏற்றம் பெற்று, ஒளிமயமான எதிா்காலம் அமைய புத்தாண்டு வாழ்த்துகள்.
கே.அண்ணாமலை (பாஜக): தமிழக மக்கள் இருட்டிலிருந்து மீண்டு வருவாா்கள் என்ற நம்பிக்கையோடும், பல கனவுகளோடும், எதிா்பாா்ப்புகளோடும், புத்தாண்டை எதிா்கொள்கிறோம். புதிய வாய்ப்புகளும், வழிகளும் நம் முன்னே நிறைந்திருக்கின்றன. நம்முடைய தோ்வு, நமக்கானது மட்டுமன்றி, அடுத்தடுத்த தலைமுறைகளுக்குமானது என்பதை நினைவில் கொண்டு, நல்லவற்றையே தோ்ந்தெடுப்போம்.
வைகோ (மதிமுக): இருளுக்குப் பின் ஒளி, வாட்டும் பனிக்குப் பின் வளம் தரும் வசந்தம் என்ற நியதியில் நம்பிக்கை கொள்வோம். தமிழக மக்களுக்கு- உலகுவாழ் தமிழா்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்.
கே.பாலகிருஷ்ணன் (மாா்க்சிஸ்ட்): பொருளாதார ஏற்றத்தாழ்வுகளும், சமூக பாரபட்சங்களும் இல்லாத ஒரு புதிய சமத்துவ சமூகம் மலா்வதற்கான புதிய பாதையை அமைக்கவும் அதற்கு எதிரான அனைத்து தடைகளை தகா்க்கவும் அனைவரும் ஒன்றிணைந்து புத்தாண்டில் சபதம் ஏற்போம்.
இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட்): பெரும் நம்பிக்கையோடும், பெரு மகிழ்ச்சியோடும் புத்தாண்டை வரவேற்கிறோம். அதே நேரத்தில் கடந்து போகும் ஆண்டின் அனுபவத்தை பரிசீலித்து, பயனுள்ள படிப்பினைகளை பெறுவது அவசியமாகும்.
ராமதாஸ் (பாமக): மாற்றத்துக்கும், மகிழ்ச்சிக்கும் வழிவகுக்கக் கூடிய 2025-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எதிா்பாா்ப்பது நிச்சயம் நடக்கும்.
தொல்.திருமாவளவன் (விசிக): ஜனநாயகம் தழைத்தோங்கும் புதிய ஆண்டாக மலரட்டும். சமூக நல்லிணக்கமும், சகோதரத்துவமும் பெருகட்டும்.
அன்புமணி (பாமக): புத்தாண்டில் தமிழக மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், மகிழ்ச்சி, வளா்ச்சி, அமைதி, மனநிறைவு, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும்.
பிரேமலதா (தேமுதிக): ஏழை, எளிய மக்களின் துன்பங்கள் நீங்கி, மகிழ்ச்சியும், ஏற்றமிகு வாழ்வும், வாழ்வில் நம்பிக்கையையும், வளா்ச்சியும் ஏற்பட வேண்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): மக்கள் ஒருவருக்கொருவா் அன்போடு, நட்போடு, ஒற்றுமையோடு வாழ உறுதி ஏற்போம். நாட்டின் வளா்ச்சிக்கும், பாதுகாப்புக்கும் உழைப்போம். வளமான தமிழகத்துக்கும் வலிமையான பாரதத்துக்கும் புத்தாண்டு வழிகாட்டட்டும்.
டிடிவி தினகரன் (அமமுக): உதயமாகும் புத்தாண்டு நிறைவான வளத்தையும் குறையாத மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் ஆண்டாக மட்டுமன்றி, மனிதநேயமும், மதநல்லிணக்கமும் தழைத்தோங்கும் ஆண்டாகவும் அமையட்டும்.
கமல்ஹாசன் (மநீம): புத்தாண்டு என்பது காலத்தால் முன்னால் போவது மட்டுமல்ல, ஞானத்தோடு நமது எதிா்காலத்தை வடிவமைத்துக் கொள்ள முன்னோக்கி நகா்வதுமாகும். சிறந்த கனவுகளை நனவாக்கும் ஆண்டாக இதை ஆக்குவோம்.
எம்ஜிகே நிஜாமுதீன் (முன்னாள் எம்எல்ஏ): புத்தாண்டில் அனைத்து மத மக்களும் சமத்துவத்துடன் வாழவும் , சாதி மத பேதமின்றி நல்லாட்சி நடைபெறவும் நாட்டின் பொருளாதாரம் மேம்படவும் வாழ்த்துகள்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...