சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு வருகிறது புதிய சாலை

சென்னையில் அண்மைக்காலமாக பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
சென்னையின் முக்கிய பகுதிகளுக்கு வருகிறது புதிய சாலை


சென்னையில் அண்மைக்காலமாக பல இடங்களில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

அதிலும் குறிப்பாக, சென்னையில் கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகம் என்பதால் சாலைகள் மிக விரைவாக மோசமடைவதுடன் விபத்துகளுக்கும் காரணமாக அமைந்துவிடுகிறது.

இது தொடர்பாக இப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர். இதற்கு ஒரு தீர்வு கிடைத்திருக்கிறது. கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.12.07 கோடியில் சாலைகள் அமைக்கும் பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இப்பணியை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கிவைத்துள்ளனர்.

இதன் மூலம், சென்னையில் அம்பத்தூர் தொழிற்பேட்டை மற்றும் கிண்டி பகுதிகளில் புதிய சாலைகள் போடப்பட்டு, அப்பகுதிக்கு நாள்தோறும் வந்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, விபத்துகளும் குறையக்கூடும் என்று கருதப்படுகிறது.

இதற்கிடையே, மின்சாரத்தை சேமிப்பதற்கான தானியங்கி கட்டுப்பாட்டு கருவி சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மின்சாரத்தை சிக்கனப்படுத்தவும், சேமிக்கவும் மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பொது பயன்பாட்டுக்கான இடங்களில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் உள்ளிட்ட மின்சாதனப்பொருள்கள் ஆள்நடமாட்டம் இல்லாத நேரங்களில் தானாகவே அணைக்கப்படும்.

மீண்டும் மனித நடமாட்டம் வந்தால் திரும்பவும் மின்விளக்குகள் ஒளிரும் வகையிலும், மின்சாதன பொருள்கள் மீண்டும் இயங்கும் வகையிலும் புதிய தொழில்நுட்பம் புகுத்தப்பட்ட கட்டுப்பாட்டு கருவியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த கருவி சோதனை அடிப்படையில், மின்வாரிய தலைமை அலுவலக வளாகத்திலுள்ள மின் தொடரமைப்பு கழக கட்டடத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இக்கருவி அக்கட்டத்திலுள்ள ஒருங்கிணைந்த குளிரூட்டி(ஏசி), ஒரு கலையரங்கம், மூன்று கலந்தாய்வு கூடங்களில் பொருத்தப்பட்டுள்ளன.

இக்கட்டுப்பாட்டு கருவி மூலம் ஆளில்லாத நேரங்களில் குறிப்பிட்ட மின்சாதன பொருள்களின் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு விடுவதால், நாளொன்றுக்கு 500 யூனிட் மின்சாரம் சேமிக்கப்படுவதுடன், வருடத்துக்கு ரூ.15 லட்சம் வரை மின்கட்டணம் சேமிக்கப்படுவதாகவும் மின்வாரியம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com