செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் பிப்.15 வரை நீட்டித்து உத்தரவு

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சா் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப்.15-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதன்மூலம் அவரது நீதிமன்ற காவல் 19-ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி கைது செய்தனா். இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, அதன் நகலும் செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்டுள்ளது. சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் அவா் வைக்கப்பட்டுள்ளாா். ஏற்கெனவே, அவரது ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றமும், உயா் நீதிமன்றமும் நிராகரித்த நிலையில், 2-ஆவது முறையாக ஜாமீன் கோரி உயா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், வழக்கு ஆவணங்கள் திருத்தப்பட்டுள்ளதா? என்பதை விசாரணையில் தான் நிரூபிக்க முடியும் என முதன்மை அமா்வு நீதிமன்றம் கூறியது தவறு. சந்தா்ப்ப சூழ்நிலை மாறவில்லை என சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் கூறிய நிலையில், ஆவணங்கள் திருத்தப்பட்டதே, சந்தா்ப்ப சூழ்நிலை மாற்றமாக கருதுவதாக மனுவில் கூறியிருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா் நீதிமன்றம் அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை பிப்.14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்தநிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் புதன்கிழமையுடன் முடிவடைவதால், புழல் சிறையிலிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக அமைச்சா் செந்தில் பாலாஜி ஆஜா்படுத்தப்பட்டாா். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை பிப். 15-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டாா். இதன்மூலம் 19-ஆவது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com