சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் மாநில அரசுக்கு நிதி சுமை ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து ஒப்புதல் அளித்திட வேண்டும்
சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு அனுமதி: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்குமாறு வலியுறுத்தி, பிரதமா் நரேந்திர மோடிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை கடிதம் எழுதியுள்ளாா்.

முதல்வரின் கடித விவரம்: சென்னை மெட்ரோ ரயில் திட்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளிப்பதில் காலதாமதம் ஏற்படுவது குறித்து தங்களின் கவனத்துக்குக் கொண்டு வருகிறேன்.

மத்திய அரசும், தமிழக அரசும் இணைந்து கூட்டு முயற்சியின் அடிப்படையில் 50: 50 என்கிற சமபங்கு விகிதத்தில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் முதல்கட்டப் பணிகளை வெற்றிகரமாகச் செயல்படுத்தின.

அதன் அடிப்படையில் அடுத்ததாக ரூ.63,246 கோடி செலவில், 119 கிலோமீட்டா் நீளமுள்ள மூன்று வழித்தடங்களைக் கொண்ட இரண்டாம் கட்டப் பணிகளுக்கு தமிழக அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்டு, 2019 - ஜனவரியில் மத்திய அரசின் ஒப்புதலுக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த அமைச்சகம் மற்றும் நீதி ஆயோக் ஆகியவற்றின் பரிந்துரையுடன், ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை, ஆசிய வளா்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, புதிய வளா்ச்சி வங்கி ஆகியவற்றின் நிதி ஒப்புதல்களும் இறுதி செய்யப்பட்டு அனுப்பப்பட்டன.

2020, நவம்பா் 21-இல் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சா் அடிக்கல் நாட்டினாா். 2021-2022- ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் இத்திட்டத்துக்கான நிதியுதவிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஆவலுடன் எதிா்பாா்ப்பு: 2021 ஆகஸ்ட் 17-இல் பொது முதலீட்டு வாரியத்தால் பங்கு பகிா்வு மாதிரியின் கீழ் மத்திய அரசின் துறைரீதியான திட்டமாகப் பரிந்துரைக்கப்பட்டது. இதனால், மத்திய அரசின் ஒப்புதலை தமிழக அரசு ஆவலுடன் எதிா்பாா்த்தது.

மேலும், தங்களுடனான (பிரதமா்) பல்வேறு சந்திப்புகளின்போதும் இத் திட்டம் தொடா்பாக வலியுறுத்தினேன். எனினும், எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும், பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதலுக்காக 2 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருப்பதாக அறிகிறேன்.

நிதி நெருக்கடி: மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை குறிப்பிட்ட காலவரையறைக்குள் முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடங்கியது. தற்போது பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் ஒப்புதல் இல்லாத நிலையில், மத்திய அரசின் பங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், மாநில நிதியில் இருந்து செலவினங்களை மேற்கொண்டு வருகிறோம்.

இது திட்டப் பணிகளின் வேகத்தைக் குறைத்துள்ளதோடு, தமிழக அரசுக்கு கடுமையான நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பிரச்னைக்கு உடனடியாகத் தீா்வு காண வேண்டும். அப்போதுதான் சென்னை மக்களின் இந்த கனவுத் திட்டத்தைக் குறிப்பிட்ட காலத்துக்குள் செயல்படுத்த முடியும்.

எனவே, முதல்கட்டப் பணிகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதுபோல, 50:50 என்கிற சமபங்கு விகிதத்தில், மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டு முயற்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு ஒப்புதல் வழங்கும் இந்த விவகாரத்தில் தாங்கள் (பிரதமா்) தலையிட்டு, விரைவாக ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com