சட்டைநாதர் சுவாமி கோயிலில் சுக்கிர வார பூஜை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் சட்ட சிக்கல்கள் தீரும் என்ற ஐதீகத்தால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
சட்டைநாதர் சுவாமி கோயிலில் சுக்கிர வார பூஜை: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு
Published on
Updated on
1 min read



சீர்காழி: சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் சட்ட சிக்கல்கள் தீரும் என்ற ஐதீகத்தால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உள்பட்ட சட்டைநாதர் கோயில் உள்ளது.7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்தத் திருக்கோயிலில் திருநிலைநாயகி அம்பாள் உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் சுவாமி அருள் பாலிக்கிறார். மலைக் கோயிலில் தோணியப்பர் உமாமகேஸ்வரி அம்மன் கயிலாய காட்சியாக உருவ வழிபாட்டில் காட்சி தருகிறார். அதன் மேல் மலையில் சட்டைநாதர் காட்சி தருகிறார்.காசிக்கு அடுத்த படியாக  அஷ்ட பைரவர்கள் இந்த கோயிலில் தான் தனி சன்னதியில் எழுந்து காட்சி தருகின்றனர். ஆகையால் பைரவர் சேத்திரம் எனவும் கோயில் அழைக்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க கோயிலாகும். 

பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் வாரந்தோறும் நள்ளிரவு பூஜையாக சுக்கிர வார வழிபாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற சுக்கிர வார வழிபாட்டில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். 

முன்னதாக, பலிபீடத்திற்கு பல்வேறு வகையான வாசனை நறுமண திரவிய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து முத்து சட்டைநாதர் சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு புனுகு சாந்தி தீபாரதனை காட்டப்பட்டு பின்னர் மலைமீது அமைந்துள்ள சட்டைநாதர் சுவாமிக்கு பச்சைப்பயிறு பாயசம், உளுந்து வடை நிவேதனம் செய்து குடுமி இல்லாத தேங்காய் கொண்டு அர்ச்சனை செய்து புனுகு சாத்தப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது. 

இதில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்து சென்றனர்.சுக்கிர வார பூஜையில் பங்கேற்று பக்தியுடன் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு நினைத்த காரியம் கைகூடும் எனவும் சட்ட சிக்கல்கள் தீருவதோடு சத்ருக்கள் தொல்லை  சூழ்ச்சி ஆகியவற்றிலிருந்து விடுபட முடியும். பில்லி சூனியம் ஏவல் போன்றவை அண்டாது. கடன்தொல்லை அகன்று தமக்கு வரவேண்டிய  பணவரவு வந்தடையும் என்பது ஐதீகம்.  இதனை அறிந்து அதிக அளவு கடந்த சில வாரங்களாக சுக்கிரவார பூஜையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவு வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com