தமிழ்நாடு பட்ஜெட் நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு
நிதியமைச்சா் தங்கம் தென்னரசு

தமிழக அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் நிதியமைச்சா் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்யவுள்ளாா்.

மக்களவைத் தோ்தல் நெருங்க உள்ள நிலையில் இந்த நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதால் மிகுந்த எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையில் ‘மாபெரும் தமிழ்க்கனவு’ எனும் 7 சிறப்பு அம்சங்கள் இடம்பெற உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

  • சமூக நீதி,

  • கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு

  • உலகை வெல்லும் இளைய தமிழகம்

  • அறிவுசாா் பொருளாதாரம்

  • சமத்துவ நோக்கில் மகளிா் நலம்

  • பசுமைவழிப் பயணம்

  • தாய்த் தமிழும் தமிழா் பண்பாடும்

ஆகிய அம்சங்கள் இடம் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டுக்கான (2024-25) நிதிநிலை அறிக்கை ‘தடைகளைத்தாண்டி, வளா்ச்சியை நோக்கி’ என்கிற தலைப்பில் அளிக்கப்படவுள்ளதாக தமிழக அரசின் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவிருக்கிறது.

தமிழ்நாடு நிதித்துறை அமைச்சராக தங்கம் தென்னரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

பட்ஜெட் நேரம்.. தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் உரை சுமார் ஒன்றரை மணி நேரம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் நேரத்து பட்ஜெட்... வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் மக்களவைத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பொதுவாக தேர்தல் நேரங்களில் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் கூடுதல் அறிவிப்புகள் இருக்கும் என்பதால், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் பல அறிவிப்புகள் இருக்கும் என்றும், கூடுதல் நேரம் பட்ஜெட் உரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.

“கடந்த 100 ஆண்டுகளில் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தமிழர்களின் வாழ்வை தமைநிமிர்த்தியது.”

தமிழ் இலக்கியங்களை மொழி பெயர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற 25 நூல்களை மொழிபெயர்க்க ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மொழித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கீழடி உள்ளிட்ட 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுத் திட்டங்களுக்கு ரூ. 5 கோடி ஒதுக்கீடு

கீழடியில் திறந்தவெளி அருங்காட்சியம் அமைக்க ரூ. 17 கோடி ஒதுக்கீடு.

2030-க்குள் தமிழ்நாடு ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்க்கிரிட் வீடுகள் கட்டித் தரப்படும். முதல்கட்டமாக 2024-25ஆம் ஆண்டில் ஒரு லட்சம் வீடுகள் ரூ.3.5 லட்சம் மதிப்பில் கட்டப்படும்.

தமிழகம் முழுவதும் ரூ.  1,000 கோடியில் சாலைகள் மேம்படுத்தப்படும்.

ரூ,365 கோடி மதிப்பில் 2,000 பழைய மேல்நிலை குடிநீர்த் தொட்டிகளுக்கு பதிலாக புதிய தொட்டிகள் கட்டப்படும்.

தாயுமானவர் வறுமை ஒழிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்றோர், தனித்து வாழும் முதியவர், ஒற்றை பெற்றோர் குழந்தைகள் கண்டறிந்து அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்டவை வழங்கப்படும்.

சிங்கார சென்னை 2.0 திட்டத்துக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ. 1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சைதாப்பட்டை முதல் திருவிக பாலம் வரையிலான பணிகளுக்கு முன்னிரிமை அளிக்கப்பட்டு 15 மாதங்களில் பணிகள் முடிக்கப்படும்.

ஈரோடு, மதுரை, கோவை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் நொய்யல், காவிரி, தாமிரபரணி, வைகை நதிகள் புனரமைப்பு, ஆற்றங்கரைகளில் பூங்கா, திறந்தவெளி அம்சங்கள் அமைக்க திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பூந்தமல்லி அதிநவீன திரைப்பட நகரம் அமைக்க ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ. 1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மகளிர் நலன் காக்கும் திட்டங்களுக்காக ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கப்படும்.

மகளிர் இலவச பேருந்து திட்டத்துக்காக இந்த நிதியாண்டில் ரூ. 3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளிலும் மகளிர் இலவச பேருந்து திட்டம் விரிவுபடுத்தப்படும். 

அரசுப் பள்ளிகளில் இருந்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ. 1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டம் வரும் கல்வியாண்டில் அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.370 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் கல்வி ஆண்டு முதல் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ. 600 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்களின் பள்ளி, கல்லூரி கட்டணங்கள், விடுதி கட்டணங்களை அரசே ஏற்கும்.

மாநிலம் முழுவதும் 10,000 சுய உதவிக் குழுக்கள் புதிதாக உருவாக்கப்படும்.

இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்துக்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

பேராசிரியர் அன்பழகன் திட்டத்தின் கீழ் ரூ. 1,000 கோடியில் பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

பள்ளிக் கல்வித்துறைக்கு வரும் கல்வியாண்டுக்கு ரூ.44,042 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் அதிநவீன நூலகம் கருணாநிதி பெயரில் புதிதாக கட்டப்படும்.

ரயில்வே, வங்கிப் பணிகளில் தமிழக இளைஞர்கள் அதிகளவில் சேர சென்னை, கோவை, மதுரை மண்டலத்தில் விடுதி வசதியுடன் 6 மாத பயிற்சி வழங்க ரூ. 6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கோவையில் 20 லட்சம் சதுர அடியில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும்.

பல்வேறு வங்கிகள் மூலம் ஒரு லட்சம் மாணவர்களுக்கு ரூ. 2,500 கோடி கல்விக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் முதல்வன் திட்டத்துக்கு ரூ. 200 கோடி ஒதுக்கீடு

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்துக்கு ரூ. 243 கோடி ஒதுக்கப்படும். இன்னுயிர் காப்போம் திட்டத்தின் உச்சவரம்பு தொகை ஒரு லட்சத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயர்த்தப்படும்.

ராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு ரூ. 20,198 கோடி ஒதுக்கீடு

அனைத்து சிப்காட் பகுதிகளிலும் பணிபுரியும் பெண்களுக்காக குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்.

மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்காக 6 இடங்களில் தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும்.

விருதுநகர், சேலத்தில் ரூ.2,483 கோடியில் ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும்.

சென்னை போன்று கோவை, மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1,000 இடங்களில் இலவச வைஃப்பை சேவை வழங்கப்படும்.

குலசேகரப்பட்டினத்தில் இஸ்ரோவில் ராக்கெட் தளம் அமையவுள்ள இடம் அருகே விண்வெளி பூங்கா அமைக்கப்படும்.

தமிழ்நாடு நீர் வளம் மற்றும் தகவல் மையத்தை ரூ. 30 கோடியில் செயல்படுத்த அரசு ஒப்புதல்

தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில் 1076 கி.மீ. கடற்கரை பகுதிகளை மையமாக கொண்டு நெய்தல் மீட்சி இயக்கம் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே ரூ.343 கோடி மதிப்பில் பல்லுயிர் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

மெரினா,தூத்துக்குடி, புதுக்கோட்டை, கடலூர்ஆகிய இடங்களில் உள்ள கடற்கரைகளை தேர்ந்தெடுத்து ரூ.250 கோடி மதிப்பில் மேம்பாட்டு திட்டங்களை அமல்படுத்தி நீள நிற கடற்கரை சான்றுகள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

3,000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். 500 மின் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டு இந்தாண்டே பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். சிற்றுந்து பேருந்து திட்டம் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும்.

சென்னை மெட்ரோவுக்கு ரூ.12,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் மதுரை, கோவையில் மெட்ரோ கட்டப்படும்.

சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு -ஆவடி இடையே மெட்ரோ ரயில் விரிவாக்கம் செய்யப்படும்.

வணிகம்,தொழில்நுட்பத்துறை அலுவலகங்களுக்காக சென்னை சென்டர்ல் அருகே மரபுசார் வடிவமைப்புடன் 10 லட்சம் சதுர அடியில் 27 தளங்களுடன் ரூ. 688 கோடி மதிப்பில் கட்டடம் கட்டப்படும்.

பழங்குடியினத்தினரை மேம்படுத்த தொல்குடி என்ற திட்டம் ரூ. 1,000 கோடியில் செயல்படுத்தப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி துறை கீழ் இயங்கும் பள்ளிகளை மேம்படுத்த ரூ. 36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கீட்டையும் எடுக்க மத்திய அரசை வலியுறுத்திகிறோம்.

திருப்பரங்குன்றம்,திருநீர்மலை கோயில்களில் ரோப் கார் வசதி ஏற்படுத்தப்படும்.

துண்டில் வளைகள், மீன் இறங்குதளக்கள் அமைக்க ரூ. 450 கோடி நிதி ஒதுக்கப்படும்.

அயோத்திதாசப் பண்டிதர் குடிசை மாற்று திட்டத்துக்கு ரூ. 230 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக பாதுகாப்புத்துறையின் பெயர் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை என மாற்றம் செய்யப்படுகிறது.

45 பலதுறை கல்லூரிகளை மேம்படுத்த ரூ. 3,014 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அடுத்த முட்டுக்காடு பகுதியில் 3 லட்சம் சதுர பரப்பில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.

கைத்தறி, கைவினைப் பொருள்கள் விற்பனைக்காக சென்னையில் வணிக வளாகம் அமைக்கப்படும்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ. 25,858 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் ரூ.345 கோடியிலும், திருச்சியில் ரூ.350 கோடியிலும் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும்.

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ என்ற புதிய திட்டத்தின் மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மாதம் ஒரு நாள் முழுவதும் ஒரு ஊரில் கள ஆய்வு மேற்கொண்டு, அங்கேயே தங்கி அரசு திட்டங்களை கண்காணிக்க வேண்டும். 

1,000 பழமை வாய்ந்த கோயில்கள் ரூ. 100 கோடி மதிப்பில் புனரமைக்கப்படும். தேவாலயங்கள், மசூதிகளிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

தமிழ்ப் புதல்வன்திட்டம் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் உயர்கல்விக்காக மாதம் ரூ.1,000 வழங்கப்படும். இதற்காக ரூ.360 கோடி ஒதுக்கீடு.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ. 440 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் முதல்வரின் இளைஞர் திருவிழா நடத்தப்படும். பேச்சு, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்படும்.

தமிழக உயர்கல்வித் துறைக்கு ரூ. 8,212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 20,043 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய அளவிலான 7.24 சதவீத வளர்ச்சியை ஒப்பிடும்போது, 2022-23இல் தமிழ்நாடு 8.19 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com