பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையின் தோற்றம்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன் மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணையின் தோற்றம்.

கரியக்கோயில் அணை பாசனத்திற்கு திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி

விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கும் கரியக்கோயில் அணை - விவசாயிகள் உற்சாகம்

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை‌, இன்று சனிக்கிழமை காலை பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் கல்வராயன்மலை அடிவாரம் பாப்பநாயக்கன்பட்டி கிராமத்தில், கரியக்கோயில் ஆற்றின் குறுக்கே, 52.49 அடி உயரத்தில்,190 மில்லியன் கன அடி தண்ணீர் தேங்கும் வகையில், 188.76 ஏக்கர் பரப்பளவில் கரியக்கோயில் அணை அமைந்துள்ளது. இந்த அணையால், பாப்பநாயக்கன்பட்டி, ஏழுப்புளி, பீமன்பாளையம், தும்பல், அய்யம்பேட்டை, இடையப்பட்டி, கத்திரிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில், 3,600 ஏக்கர் விளைநிலங்கள் ஆயக்கட்டு வாய்க்கால் பாசன வசதி பெறுகின்றன. ஏ.குமாரபாளையம், கல்யாணகிரி, கல்லேரிப்பட்டி பகுதியில் ஏறக்குறைய 2000 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி ஆறு மற்றும் ஏரிப்பாசனம் பெறுகின்றன. சுற்றுப்புற கிராமங்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கி வரும் இந்த அணை, கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் நிரம்பவில்லை. தற்போது அணையில் 34.90 அடி உயரத்தில் 83.85 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே தேங்கி உள்ளது.

பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை பாசன தண்ணீர் திறப்பு பூஜையில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயிகள்.
பாப்பநாயக்கன்பட்டி கரியக்கோயில் அணை பாசன தண்ணீர் திறப்பு பூஜையில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் பாசன விவசாயிகள்.

இந்நிலையில், 3 மாதங்களாக மழையின்றி வறட்சி நிலவுவதால், அணையிலிருந்து பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு (சிறப்பு நினைப்பாக) தண்ணீர் திறக்க வேண்டுமென, ஆயக்கட்டு பாசன விவசாயிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு, தலைமை மதகு வழியாக, இன்று காலை 8 மணி முதல் வரும் மார்ச்.6 ஆம் தேதி காலை வரை தொடர்ந்து 11 நாட்களுக்கு, வினாடிக்கு 40 கனஅடி வீதம், (நாளொன்றுக்கு 3.45 மி. கன அடி வீதம் மொத்தம் 37.95 மி.கன அடி) தண்ணீர் திறக்கவும், புதிய ஆயக்கட்டு வாய்க்கால் பாசனத்திற்கு வலது மற்றும் இடது வாய்க்கால்களில் தலா 15 கன அடி வீதம், வினாடிக்கு 30 கனஅடி, வரும் மார்ச் 6 காலை 8 மணி முதல் தொடர்ந்து 10 நாட்களுக்கு, (நாளொன்றுக்கு 2.59 மில்லியன் கன அடி வீதம் மொத்தம் 25.90 மில்லியன் கன அடி) தண்ணீர் திறக்க சேலம் மாவட்ட ஆட்சியர் இரா. பிருந்தாதேவி பரிந்துரை செய்தார்.

இதனையடுத்து கரியக்கோயில் அணையில் இருந்து தண்ணீர் திறக்க ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவின் பேரில், தமிழக அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா வெள்ளிக்கிழமை அரசாணை வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து இன்று சனிக்கிழமை காலை பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு பூஜையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் கவிதாராணி , உதவி பொறியாளர் கோகுல்ராஜா, பெத்தநாயக்கன்பாளையம் வட்டாட்சியர் மாணிக்கம் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்து கொண்டனர். வாய்க்கால் மற்றும் ஆற்றுப் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதால், கரியக்கோயில் அணை பகுதி மற்றும் ஆற்றுப்படுகை கிராமங்களில், நீண்ட கால பலன் தரும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள் பயிரிட்டுள்ள பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com