குடும்பத் தகராறில் விபரீதம்:  புதுமணத் தம்பதி கிணற்றில் குதித்து தற்கொலை

புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவியும், கணவனும் அடுத்தடுத்து கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண கோலத்தில் அருள்முருகன் - அபிராமி.
திருமண கோலத்தில் அருள்முருகன் - அபிராமி.
Published on
Updated on
1 min read

வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே நேற்று நள்ளிரவு புதுமணத் தம்பதியரிடையே ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த மனைவியும் கணவனும் அடுத்தடுத்து கிணற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி, கிராம மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

வாழப்பாடி அருகே துக்கியாம்பாளையம் ஊராட்சி மாரியம்மன் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிர்வேல் மகன் அருள்முருகன் (27). கட்டடத் தொழிலாளியான இவருக்கும், சி.பி.வலசு சமத்துவபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்தோஷ் என்பவரின் மகள் அபிராமி (19) என்பவருக்கும், கடந்த 3 மாததத்திற்கு முன் திருமணமானது. 

மகிழ்ச்சியோடு வாழ்க்கையை ஆரம்பித்த இவர்களுக்குள் நேற்றிரவு வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.  இதில் மனமுடைந்த இளம்பெண் அபிராமி, தற்கொலை செய்து கொள்வதற்காக, நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அருகிலுள்ள விவசாயி மாணிக்கம் என்பவரது தோட்டத்திலுள்ள கிணற்றில் குதித்துள்ளார். 

இதனைக்கண்ட இவரது கணவர் அருள்முருகனும் அதே கிணற்றில் குதித்தார். இருவரும் பரிதாபமாக  உயிரிழந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளர் பாஸ்கரபாபு தலைமையிலான காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, வாழப்பாடி தீயணைப்பு படையினர் துணையுடன் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி, புதுமணத் தம்பதியான அருள்முருகன், அபிராமி இருவரது உடலையும் இன்று அதிகாலை  மீட்டு, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

தற்கொலை செய்து கொண்ட தம்பதிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆனதால், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த வாழப்பாடி காவல் துறையினர், சேலம் கோட்டாட்சியர் மற்றும் வாழப்பாடி காவல்துறை டிஎஸ்பி விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளனர்.

புதுமணத் தம்பதியான இளம்பெண்ணும், கணவனும் அடுத்தடுத்து கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம், இவர்களது பெற்றோர், உறவினர்கள் மட்டுமின்றி, கிராம மக்களிடையேயும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com