
ஈரோடு: பெருந்துறை அருகே வீட்டில் பதுங்கியிருந்த தேடப்பட்டு வரும் குற்றவாளியை பிடிக்கச் சென்ற உதவி ஆய்வாளரை அரிவாளால் தாக்க முயற்சித்தை அடுத்து காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள குள்ளம்பாளையத்தில் கொலை உள்பட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய திருநெல்வேலியை சேர்ந்த சிவா என்ற சிவசுப்பு என்பவர் உள்பட நான்கு குற்றவாளிகள் பதுங்கி இருந்துள்ளானர்.
இதனையறிந்த திருநெல்வேலி குற்றப்பிரிவு காவல்துறையினர் தேடப்பட்டு வரும் குற்றவாளியான சிவசுப்பு உள்பட மற்றவர்களையும் பிடிக்க வியாழக்கிழமை மாலை வந்துள்ளனர்.
அப்போது காவல் உதவி ஆய்வாளர் ஆண்டோ என்பவர் சிவசுப்பு பதுக்கி இருந்த வீட்டிற்குள் செல்ல முயற்சித்த போது, சிவசுப்பு அரிவாளால் தாக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து தன் பாதுகாப்பு மற்றும் சக காவலர்களின் பாதுகாப்பைக் கருதி உதவி ஆய்வாளர் ஆண்டோ துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குண்டு வீட்டின் சுவற்றில் பாய்ந்தது. இந்த பதில் தாக்குதலில் இரு தரப்பினருக்கும் எந்தவித காயமும் பாதிப்பும் ஏற்படாத நிலையில் சிவசுப்பு உள்பட அனைத்து குற்றவாளிகளும் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து திருநெல்வேலி உதவி ஆய்வாளர் ஆண்டோ பெருந்துறை காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து தப்பியோடிய குற்றவாளிகளை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
தப்பியோடிய முக்கிய குற்றவாளியான சிவசுப்பு மீது கொலை, கொள்ளை, சட்டவிரோதமாக ஆயுதங்கள், வெடிமருந்துகள் பயன்படுத்தல், கஞ்சா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மிசோரத்தில் நிலநடுக்கம்!
குற்றவாளியை துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்க முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.