புதுக்கோட்டை: வேங்கைவயல் சம்பவத்தில் உண்மை அறியும் பரிசோதனைக்கு அனுமதி கோரும் சிபி சிஐடி போலீஸாரின் மனு மீதான விசாரணை வரும் ஜன. 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பட்டியலின கிராமத்தின் குடிநீர்த் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடத்தி வரும் சிபி சிஐடி போலீஸார், சந்தேகத்துக்குரிய 10 பேரிடம் உண்மை அறியும் பரிசோதனை நடத்த முடிவு செய்தனர்.
இதற்கான அனுமதி கோரி மாவட்ட எஸ்சி எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு செய்திருந்தனர். உண்மை அறியும் சோதனை தொடர்பாக விரிவான தகவல்களுடன் மனு செய்ய நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
படிக்க: சென்னையில் நாளை கனமழை பெய்யும்!
இதனைத் தொடர்ந்து சிபி சிஐடி துணைக் காவல் கண்காணிப்பாளர் பால்பாண்டி மருத்துவ விடுப்பில் இருந்ததால் 3 முறை இந்த விசாரணை ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சனிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. டிஎஸ்பி பால்பாண்டி ஆஜராகி, உண்மை அறியும் சோதனை தொடர்பான விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
இந்த அறிக்கையின் நகல்களை தொடர்புடைய 10 பேருக்கும் வழங்கி அவர்களின் கருத்தை அறியும் வகையில் வரும் ஜன. 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி எஸ்.ஜெயந்தி உத்தரவிட்டார்.