சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஈரோட்டில் பொதுமக்கள் மறியல்  

சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீராக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி ஈரோட்டில் பொதுமக்கள் மறியல்  

ஈரோடு: சீராக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாநகராட்சி 1ஆவது மண்டலத்தில் உள்ள 6ஆவது வார்டில் ஞானபுரம், பச்சைபாளிமேடு பகுதிகளில்  கடந்த சில நாள்களாக குடிநீர் விநியோகிப்பதில் பிரச்னை ஏற்பட்டு 3 நாட்களுக்கு ஒரு முறை மிகக் குறைந்த நேரம் மட்டுமே திறந்து விடப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தொடர்ந்து மூன்று வாரத்திற்கு மேல் இதே நிலை நீடித்ததால் இப்பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென கனிராவுத்தர்குளம் பகுதியில் உள்ள ஈரோடு- சக்தி   சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால்  ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வாகனங்கள், அதேபோல் சத்தியமங்கலம், கோபியில் இருந்து ஈரோட்டுக்கு வந்த வாகனங்கள் சாலையின் இருபுறமும் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு வீரப்பன் சத்திரம் காவல் துறையினர், வட்டாட்சியர் ஜெயக்குமார்,  வார்டு கவுன்சிலர் தமிழ்பிரியன்  உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.            

அப்போது பொதுமக்கள் எங்கள் பகுதியில் கடந்த மூன்று வாரமாக சீரான குடிநீர் வராததால் பல்வேறு வகையில் அவதி அடைந்து வருகிறோம். எனவே சீரான முறையில்  தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

அப்போது குடிநீர் விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறுவதில் பிரச்னை இருப்பதாகவும், தற்போதுதான் அது குறித்து தெரியவந்துள்ளதாகவும், உடனடியாக அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினர்.

இதனை ஏற்று பொதுமக்கள் தங்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் ஈரோடு-சத்தியமங்கலம் சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com