ஜல்லிக்கட்டுப் போட்டி: காவல்துறையின் பத்து கட்டுப்பாடுகள் என்ன தெரியுமா?

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை(ஜன.15) நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி திங்கள்கிழமை(ஜன.15) நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே ஜன. 15, 16, 17 தேதிகளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளைக் காண தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பங்கேற்பது வழக்கம்.

இதையொட்டி, ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதிகளில் கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கி முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. பாதுகாப்பு கட்டமைப்புகள், ஜல்லிக்கட்டு மைதானத்தை சமன் செய்தல், வாடிவாசல், மேடை, முக்கிய விருந்தினா்கள் மாடம், பாா்வையாளா்கள் மாடம் அமைத்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

மேலும், பாா்வையாளா்கள், பங்கேற்பாளா்களுக்குத் தேவையான குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான ஏற்பாடுகளும், ஆபத்துக் கால முதலுதவி, அவசர சிகிச்சைக்கான ஏற்பாடுகளும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.

அவனியாபுரத்தில் மாவட்ட நிா்வாகம், மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பணிகள் நடைபெறுகின்றன. அலங்காநல்லூா், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு விழாக் குழுவினரும், அரசுத் துறை அலுவலா்களும் இணைந்து பணிகளை மேற்கொள்கின்றனா்.

அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகமே ஏற்று நடத்த உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான வாடிவாசல் பகுதி, விழா மேடை, பாா்வையாளா், செய்தியாளா் மேடை,  ஜல்லிக்கட்டுப் போட்டியில் நடமாடும் கழிப்பறை, குடிநீா், பெரிய அளவிலான எல்.இ.டி திரைகள் என அனைத்து ஏற்பாடுகளையும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா,மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி வசந்த் ஆகியோர் பார்வையிட்டனர்.

அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான  ஏற்பாடுகள் 95 சதவிகிதம் முடிவடைந்துள்ளது.ஏற்பாடுகளில் உள்ள சின்ன சின்ன தவறுகளை உடனடியாக சரி செய்ய கூறியுள்ளோம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார். 

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போட்டிக்கான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை, கட்டுப்பாடு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மதுரை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

அதன்படி, ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 முதல் அனுமதி வழங்கப்படும்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் பங்கேற்கும் காளைகளை ஏற்றி வாகனங்கள் வெள்ளக்கல் சாலை, திருப்பரங்குன்றம் சாலை, முத்துப்பட்டி சாலை வழியாக வருபவர்களுக்கு முத்துப்பட்டி சந்திப்பு வரை மட்டுமே அனுமதி. காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் முத்துப்பட்டி சந்திப்பில் நிறுத்திக் கொள்ளலாம்.

போட்டி நடைபெறும் இடத்திற்குள் காளைகள், அதன் உரிமையாளர்கள் அவருக்கு உதவியாளராக ஒருவர் மட்டுமே வரிசையில் நிற்க அனுமதிக்கப்படுவர்.

போட்டியில் பங்கேற்பதற்கு மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட மாடுபிடி வீரர்கள் புகைப்படம் உள்ள அனுமதிசீட்டு, உரிய மருத்துவ தகுதிச்சான்றிதழை கொண்டுவர வேண்டும்.

மாடுபிடி வீரர்கள் மற்றும் காளையின் உரிமையாளர், உதவியாளர் மதுபோதையில் இருக்கக் கூடாது. மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

காளையின் மூக்கணாங்கயிற்றை நீக்குவதற்கு கத்தியோ அல்லது கூர்மையான ஆயுதங்களையோ காளையின் உரிமையாளர் கொண்டுவரக் கூடாது.

மூக்கணாங்கயிற்றை நீக்குவதற்கு உரிய பயிற்சிபெற்ற அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் மாவட்ட நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

போட்டி நடைபெறும் பகுதியில் உள்ள வீட்டின் மாடிகளில் வீட்டின் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி. வெளி நபர்கள் யாரும் வீட்டின் மாடியில் தங்குவதற்கு அனுமதி இல்லை. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள பத்து மதுக்கடைகளுக்கும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறும் பகுதியை சுற்றியுள்ள 7 மதுக்கடைகளையும் மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com