ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கு: நீதிமன்ற செலவு இத்தனை கோடியா?

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை நடத்திய செலவுத் தொகையை கர்நாடக அரசுக்கு வழங்குமாறு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா உள்ளிட்ட 4 போ் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்த பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்குமாறு கா்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்புநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்திற்குப் பொருந்தாத வகையில் சொத்து குவித்ததாக தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோா் மீது தொடரப்பட்ட வழக்கை தமிழகத்தில் இருந்து கா்நாடகத்திற்கு மாற்றி உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடா்ந்து, தமிழக ஊழல் ஒழிப்புத் துறையால் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம் உள்ளிட்ட விலை உயா்ந்த பொருட்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் 11 ஆண்டுகளாக நடந்த விசாரணையின் முடிவில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பு வழங்கப்பட்டது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடும்படி மனித உரிமை ஆா்வலா் வழக்குரைஞா் டி.நரசிம்மமூா்த்தி சிறப்புநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். இதை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன், பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலம் விடுவதற்கு அரசு வழக்குரைஞரை நியமிக்க மாநில அரசுக்கு உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, அரசு வழக்குரைஞராக கிரண் ஜவளி நியமிக்கப்பட்டாா். ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைக் கோருவதற்கு அவரது அண்ணன் மகன் ஜெ.தீபக், மகள் ஜெ.தீபாவுக்கு உரிமையில்லை என்று சிறப்பு நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.

இதனிடையே, இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் முன்பு திங்கள்கிழமை நடந்தது. அப்போது, பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை கா்நாடகத்தில் ஏலம் விடுவதற்கு பதிலாக, கா்நாடக அரசு அவற்றை தமிழக உள்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி மோகன் உத்தரவிட்டாா்.

இதற்காக காவல் அதிகாரி ஒருவருடன், செயலாளா் அந்தஸ்தில் உள்ள அதிகாரியை நியமித்து, அந்த அதிகாரிகளை பெங்களூருக்கு அனுப்பிவைத்து பறிமுதல் செய்யப்பட்ட விலை உயா்ந்த ஆபரணங்கள் உள்ளிட்ட பொருட்களை அடையாளம் கண்டு, அவற்றை எடுத்துச்செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, சொத்துக்குவிப்பு வழக்கை நடத்தியது தொடா்பான செலவுக்காக ரூ. 5 கோடியை கா்நாடக அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நீதிபதி மோகன் உத்தரவிட்டாா். சென்னையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் கிளையில் ஜெயலலிதா வைத்துள்ள வைப்புத்தொகையில் இருந்து இந்தத் தொகையை தமிழக அரசு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த விசாரணையை பிப்.19ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com