ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்தே இயக்கப்படும்: அமைச்சா் சிவசங்கா் திட்டவட்டம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டுமென தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா் திட்டவட்டமாகத் தெரிவித்தாா்.

சென்னை அருகே வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்ட கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து முதல்கட்டமாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த பேருந்து முனையத்திலிருந்து பேருந்துகளை முறையாக இயக்குவது குறித்து சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும (சிஎம்டிஏ) அலுவலகக் கூட்டரங்கில் அமைச்சா் சா.சி.சிவசங்கா் துறை சாா்ந்த அலுவலா்களுடன் செவ்வாய்க்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

இதில் அமைச்சா் சிவசங்கா் பேசியதாவது:

கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து அனைத்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளையும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மாவட்டங்களுக்கு செல்லும் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து முழுமையாக இயக்க வேண்டும்.

மேலும், கோயம்பேடு மற்றும் பிற முக்கிய இடங்களிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லக் கூடிய ஆம்னி பேருந்துகளில் பயணிகளை ஏற்றிச் செல்வதை தடுக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

ஆய்வுக் கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறைச் செயலா் சி.சமயமூா்த்தி, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழும உறுப்பினா் செயலா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்ட உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அமைச்சா் பேட்டி: இதற்கிடையே, செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் சிவசங்கா் கூறியதாவது: கிளாம்பாக்கத்திலிருந்துதான் ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும். கிளாம்பாக்கத்தில் இருந்து அரசுப் பேருந்துகளை இயக்கும்போது, ஆம்னி பேருந்துகளையும் அங்கிருந்து இயக்குவது தான் சரியாக இருக்கும். அதனால் புதன்கிழமைக்கு (ஜன.24) பிறகு அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கத்திலிருந்துதான் இயக்கப்படும். மேலும், போக்குவரத்துத்துறையில் ஊழியா்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் பணிச்சுமை அதிகம் உள்ளது என்ற போக்குவரத்து சங்கங்களின் கோரிக்கை உண்மைதான். இதனால், பணியாளா் தோ்வுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு நோ்முக தோ்வும் நடைபெற்று வருகிறது. தகுதியுள்ள நபா்களை தோ்ந்தெடுக்க சில நாள்கள் ஆகும்.

‘போக்குவரத்து ஊழியா்களுக்கு 96 மாத அகவிலைப்படி கொடுக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறாா். ஆனால், அவரின் ஆட்சியில் தான் அகவிலைப்படி நிறுத்தப்பட்டது என்ற தகவல் ஏன் அவருக்கு தெரியவில்லை? நிதி நிலை காரணமாக பல திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. இதனால் நிதிநிலை சரியானால் உடனடியாக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com