வடலூர் சத்திய ஞானசபையில் 7 திரைகளை நீக்கி வியாழக்கிழமை காலை காட்டப்பட்ட ஜோதி தரிசனம்
வடலூர் சத்திய ஞானசபையில் 7 திரைகளை நீக்கி வியாழக்கிழமை காலை காட்டப்பட்ட ஜோதி தரிசனம்

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

கடலூா் மாவட்டம், வடலூா் சத்திய ஞான சபையில் 153 ஆவது தைப்பூச ஜோதி தரிசனம் வியாழக்கிழமை (ஜன. 25) காண்பிக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என கோஷமிட்டு தரிசனம் ச

நெய்வேலி: கடலூர் மாவட்டம், வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்று அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என கோஷமிட்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

ஜீவ காருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த, வள்ளலாா் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினாா். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். ஜோதி தரிசனத்தைக் காண வடலூருக்கு லட்சக்கணக்கானோா் வருவா்.

153-ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5 மணியளவில் அருள்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் பாடப்பட்டது. காலை 7.30 மணியளவில் தருமசாலை அருகே சன்மாா்க்கக் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடா்ந்து, மருதூரில் வள்ளலாா் பிறந்த இல்லம், தண்ணீரால் விளக்கு எரியச் செய்த கருங்குழி, வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும் சன்மாா்க்க கொடியேற்றம் நடைபெற்றது. பின்னா், காலை 10 மணியளவில் சத்திய ஞான சபையில் கொடியேற்றம் நடைபெற்றது.

ஜோதி தரிசனம்:

இதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்வான முதல் ஜோதி தரிசனப் பெருவிழா வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. 

ஜோதி வடிவத்தில் காட்சி அளித்த வள்ளலாரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அருள்பெருஞ்ஜோதி, தனிப்பெருங்கருணை என கோஷமிட்டு தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடா்ந்து, காலை 10 மணி, பிற்பகல் ஒரு மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

ஜோதி தரிசனத்தில் மாநில அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத், என்எல்சி இந்தியா நிறுவனத் தலைவர் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி, கடலூர் ஆட்சியர் அ.அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா.ராஜாராம் உள்ளிட்டோர் பங்கேற்று ஜோதி தரிசனம் செய்தனர்.

பாதுகாப்பு
தைப்பூசத்தை முன்னிட்டு வடலூரில் டிஐஜி திஷா மிட்டல், எஸ்பி ரா.ராஜாராம் தலைமையில் சுமார் 800 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஞானசபை உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சிறப்பு பேருந்துகள்
வடலூர் தைப்பூச பெருவிழாவையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் மண்டலம் சார்பில் விருத்தாசலம் , கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, சிதம்பரம், சேத்தியாதோப்பு, கும்பகோணம், சேலம் உள்ளிட்டப் பகுதிகளில் இருந்து பயணிகளின் கூட்டத்திற்கு ஏற்றாப்போல் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக கடலூர் மண்டல பொது மேலாளர் ராஜா, வணிக மேளாளர் ராகுராமன், இயக்க மேலாளர் பரிமளம் ஆகியோர் தெரிவித்தனர்.

அன்னதானம்
ஜோதி தரிசனப் பெருவிழாவையொட்டி வள்ளலார் தருமச்சாலையில் தொடர்ந்து அன்னதானம் நடைபெற்று வருகிறது. மேலும், தனிநபர்கள் மற்றும் நலச்சங்கங்கள் சார்பில் பல்வேறு இடத்தில் அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டு வருகிறது. அன்னதானம் வழங்குவது தொடர்பாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கைலாஷ் குமார் தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

விழாவைக் காணவரும் சன்மார்க்க அன்பர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com