ஒடுகத்தூர் அருகே 12 கிராம பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட வினோத திருவிழா

மலைவாழ் மக்களின் பாரம்பரியத்தை காக்கும் காளியம்மன் கோயில் திருவிழா
காளியம்மன் கோயில் திருவிழா.
காளியம்மன் கோயில் திருவிழா.

ஒடுகத்தூர் அருகே 5 மலைகளுக்கு நடுவே 12 கிராம பெண்கள் மட்டுமே கலந்துகொள்ளும் பாரம்பரிய வினோத திருவிழா நடைபெற்றது.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உள்பட்ட தொங்குமலை கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இங்கு 100 ஆண்டுகள் கடந்து பாரம்பரிய வினோத காளியம்மன் கோயில் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

இங்கு மைதானம் போல் அமைக்கப்பட்டுள்ள வெட்ட வெளியில் உள்ள ஜாலமரம் என்ற ஒரு மரத்தை வைத்து அதில் பெயர்கள் மற்றும் உருவ பொம்மைகளை வரைந்து காளியம்மனாக ஆண்டுகள் தோறும் வழிபட்டு வருகின்றனர். அதன்படி, இந்தாண்டு தொங்குமலை கிராமத்தில் காளியம்மன் கோயில் திருவிழா ஒரு வாரமாக நடந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் 3 வது நாளாக திருவிழா நடைபெற்றது. இந்த 3 நாள்கள் ஆண்களுக்காக மட்டுமே நடைபெற்ற திருவிழாவாகும்.

இந்த திருவிழாவின் இறுதியானது எருதுகட்டும் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சிக்காக, கடந்த 48 நாள்களுக்கு முன்பு இருந்து அப்பகுதி மக்கள் காளியம்மனுக்கு காப்பு கட்டி விரதம் இருந்து மலைவாழ் மக்களின் பாரம்பரிய முறைப்படி ஊர் சீதனம் கொண்டு வரப்பட்டு அம்மனாக பார்க்கபடும் ஜாலமரத்திற்கு பூஜைகள் செய்து வழிப்பட்டனர்.

இதில் ஊர் மக்கள் அனைவரும் விடியற்காலை 5 மணிக்கு ஊரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கடவுளுக்கு உகந்த இடத்தில் சென்று அனைவரும் அங்குள்ள குளத்தில் குளித்துவிட்டு சாமியை வணங்கி கையில் கட்டைகளால் ஆன கத்திகளை ஏந்திக்கொண்டு பாட்டு பாடி ஊருக்கு வருவார்கள். இது தொடர்ச்சியாக 3 நாள்கள் நடைபெறும்.

இந்த விழாவினை காண பீஞ்சமந்தை, சின்ன எட்டிபட்டு, கட்டியப்பட்டு, தேந்தூர், பெரியபணப்பாறை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை, எல்லுப்பாறை உள்ளிட்ட 12 மலை கிராமங்களில் இருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் திரண்டிருந்தனர்.

வழக்கமான திருவிழாபோல் இல்லாமல் மங்கையர்களுக்கு கொடுக்கும் மகத்துவமான திருவிழாவாக கொண்டாடப்படுவது மலைவாழ் மக்களின் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.

அதாவது திருவிழா ஒரு வாரம் நடைபெற்றால் அதில் ஆண்களுக்காக 3 நாள் ஒதுக்கப்பட்டு பெண்களுக்கென்று கடைசியாக ஒரு நாள் திருவிழா நடைபெறும். இந்த திருவிழாவின் மங்கையர்களுக்காக கொடுக்கப்படும் மகத்துவமான மதிப்பு, மரியாதை எனக் கூறி வருகின்றனர்.

நேற்று நடைபெற்ற இந்த விழாவில் பெண்கள் மட்டுமே பங்கேற்று கும்மியடித்து, குத்தாட்டம் போட்டு மகிழ்ந்தனர். இதில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு திருமண ஆடைகளை உடுத்தி திருமண கோலத்தில் அமரவைத்து அவர்களுக்கு திருமணம் செய்வது போல் சடங்குகளை செய்து அவர்களை தெய்வமாக வழிபட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஊர்ப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சாமி இருப்பதாக கூறி அங்கு அனைவரும் ஒன்று சேர்ந்து இரு பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வது போல் அவர்களை அமர வைத்து அவர்களை சுற்றி கும்மி அடித்து பாட்டுப் பாடி வழிப்பட்டனர்.

இதன் நோக்கம் முன்பு ஒரு காலத்தில் திருமணம் முடிந்த உடனே மணக்கோலத்தில் இருவரும் உயிரிழந்ததாகவும், இவர்களை இந்த மலைவாழ் மக்கள் கடவுளாக பாவித்து வழிப்பட்டு வந்ததாக கூறுகின்றனர். அவர்களை வணங்குவதால் ஊர் நன்மை அடையும், எந்த நோயும் ஊருக்கு வராது, விவசாய செழிக்கும், மும்மாரி மழை பெய்யும் என்று கருதி அவர்கள் தொன்று தொட்டு வழிப்பட்டு வருகின்றனார்.

இதனையடுத்து ஊர் பகுதியில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம் தாரை தப்பட்டை முழங்க பெண்கள் குத்தாட்டம் போட்டுக் கொண்டே சென்று கடவுளுக்கு உகந்த இடமாக பார்க்கப்படும் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து அங்குசென்று அனைவரும் அமர்ந்து சடங்குகளை செய்வார்கள். பின்பு குழந்தைகளை அமர வைத்து அவர்களை சுற்றி சுமார் 50 பேர் கும்மிப்பாட்டு பாடி நடனம் ஆடுவார்கள். அனைவருக்கும் அருள் வந்தால் தான் விழா நிறைவடைந்ததாக பார்க்கப்படுகின்றது. பின்பு அனைவரும் குழந்தைகள் காலில் விழுந்து வணங்கி ஆசி வாங்கிக்கொண்டு வீடு திரும்புவார்கள்.

இதில் பெண்களுக்கான திருவிழாவான இந்த நிகழ்ச்சியில் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டி சடங்கு செய்யும் இடத்திற்கு ஆண்கள் யாரும் வரக் கூடாது அப்படி வந்தால் அவர்களை சாமி சும்மா விடாது என்றும், அருள் வந்து ஆடி அந்த ஆண்களை ஓட ஓட விரட்டி அடிப்பதும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை ஆண்கள் எல்லையைத் தாண்டி அத்துமீறி உள்ளே வந்தால் அவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறுகின்றனர்.

விழாவை முடித்துக் கொண்டு மீண்டும் குத்தாட்டம் போட்டுக் கொண்டு வீடு திரும்புவார்கள். மணக்கோலத்தில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்து வந்தால், கடவுளை அழைத்து வருவதாக கருதி இது போன்ற சிறப்பான வினோத நிகழ்ச்சிகளை தொன்று தொட்டு மலைவாழ் பெண்கள் செய்து வருகின்றனர்.

பொதுவாகவே தாரை தப்பட்டை முழங்கினால் ஆண்கள் தானாகவே ஆடுவார்கள். ஆனால் இங்கு பெண்கள் மட்டுமே ஆடவிட்டு ஆண்கள் அமைதி காத்தனர். காரணம் 3 நாள்கள் ஆண்களுக்கு என்றும் ஒரு நாள் பெண்களுக்கு என்றும் ஒதுக்கப்பட்டது. எங்களின் மரபு ஆண்கள் ஆடக்கூடாது என்பது விதி என்று கூறுகின்றனர்.

நடு மலையில் குழந்தைகளுக்கு திருமணம் செய்து அவர்களை கடவுளாக பாவித்து அனைவரும் கீழே விழுந்து வணங்கி வேண்டி வழிபடுவது வியப்பை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com