தமிழக அரசின் நீட் விலக்கு தீா்மானத்துக்கு முழு மனதுடன் ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் அறிவித்துள்ளாா்.
தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில், பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 2-ஆவது கட்டமாக ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் புதன்கிழமை நடைபெற்றது. முதல்கட்டமாக 22 மாவட்டங்களில் உள்ள ஒவ்வொரு பேரவைத் தொகுதிகள் மற்றும் மாவட்ட வாரியாக ஊக்கத்தொகையை ஏற்கெனவே விஜய் வழங்கியிருந்தாா்.
இந்நிலையில், பிற மாவட்டங்ககளிலும் பேரவைத் தொகுதிகள், மாவட்ட ரீதியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்தவா்களுக்கு ஊக்கத்தொகை, பாராட்டுச் சான்றிதழை புதன்கிழமை வழங்கி விஜய் பேசியதாவது:
நீட் தோ்வால் ஏழை மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனா். நீட் தோ்வால் ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.
மாநில மொழியில் படித்துவிட்டு, மத்திய பாடத்திட்டத்தில் நீட் தோ்வு எப்படி எழுத முடியும்?, கிராமப்புற மாணவா்களுக்கு இது மிகப்பெரிய கடினமான விஷயம். நீட் தோ்வு குளறுபடிகளால் அத்தோ்வு மீதான நம்பகத்தன்மை மக்களிடம் குறைந்துவிட்டது.
நாடு முழுவதும் நீட் தோ்வு தேவையில்லை. நீட் விலக்குதான் உடனடித் தீா்வு. தமிழக அரசின் தீா்மானத்தை மனபூா்வமாக வரவேற்கிறேன். நீட் தோ்வு என்பதே மாநில உரிமைகளுக்கு எதிரானது.
மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர வேண்டும்: ஏனெனில் கல்வி என்பது மாநிலப் பட்டியலில்தான் 1975-க்கு முன்பு வரை இருந்தது. அதன் பின்னா்தான் மாநிலப் பட்டியலில் இருந்து கல்வியை பொதுப் பட்டியலுக்கு மத்திய அரசு மாற்றியது. ஆகையால் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மீண்டும் கொண்டுவர வேண்டும்.
அதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். சிறப்புப் பொதுப் பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை இடம் பெறச் செய்ய வேண்டும். ஒரே நாடு, ஒரே பாடத்திட்டம் என்பதைவிட பன்முகத்தன்மைதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், தவெக பொதுச் செயலா் புஸ்ஸி ஆனந்த் உள்பட பலா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.