தீபாவளி முதல் டாஸ்மாக் கடைகளில் ‘கட்டிங்’ அறிமுகம்!

மதுப்பிரியர்களுக்கு தீபாவளி முதல் 90 மி.லி ‘கட்டிங்’ மது பாட்டில்களை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தீபாவளியிலிருந்து ‘குடிமக்களின் குறை தீர்ப்பதற்காக’ மதுக் கடைகளில் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்களை விற்க டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதற்கான அனுமதியையும் தமிழக அரசிடமிருந்து டாஸ்மாக் பெற்றுவிட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே, ஒருமுறை இதேபோல டெட்ரா பாக்கெட்களில் 90 மி.லி. அளவில் மது வகைகளை விற்கத் திட்டமிட்டுக் கடும் எதிர்ப்பு காரணமாகக் கைவிடப்பட்டது.

ஆனால், இப்போது மீண்டும் பாக்கெட்டுக்குப் பதிலாக பாட்டிலில் விற்கும் முடிவுக்கு வந்துள்ள டாஸ்மாக் நிர்வாகம், தீபாவளி முதல் விற்பனையைத் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

டாஸ்மாக்கில் இருப்பதிலேயே குறைந்த விலை மது பாட்டில் தற்போது ரூ.140-க்கு விற்கப்பட்டு வரும் நிலையில், 90 மி.லி. மது பாட்டில்கள் ரூ. 80-க்கு விற்கப்படலாம் என்று கூறப்படுகிறது. மது உற்பத்தியாளர்களைச் சந்தித்த பின் இதுதொடர்பான முடிவை எடுக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக டாஸ்மாக்கில் மதுப் பிரியர்களில் ரூ.140-க்கு விற்கப்படும் குவாட்டர் (180 மி.லி.) பாட்டிலைக்கூட வாங்க முடியாத நிலையில் பலரும் இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் கட்டிங் பிரித்துக் குடிக்க மதுக் கடைகளில் இன்னொரு ஆளைத் தேடுவதை கடை வாசல்களில் காண முடியும்.

தமிழக அரசு அறிமுகப்படுத்த இருக்கும் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்கள் விற்பனைக்கு வந்த பிறகு, இனிமேல் குவாட்டர் வாங்க முடியாமல் காத்திருக்கும் மதுப் பிரியர்கள் பார்ட்னர்களைத் தேட வேண்டியிருக்காது. விற்பனையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

image-fallback
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு காவல் துறை மற்றும் பிற அரசு துறைகளின் மெத்தனமே காரணம் என்ற விமர்சனம் சரியா?

ஏற்கனவே, அருகிலுள்ள மாநிலங்களில் இதுபோன்ற குறைந்த அளவு மதுவை ‘டெட்ரா பாக்கெட்டுகளில்’ அடைத்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், தமிழக டாஸ்மாக் நிர்வாகம் மலிவான விலையில் பிளாஸ்டிக் பாட்டில்களில் வழங்க முடிவெடுத்துள்ளனர்.

ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தெலங்கானா மாநிலங்களுக்குச் சென்று, 90 மி.லி. மதுபாட்டில்கள், டெட்ரா பாக்கெட்களின் விற்பனை மற்றும் அதற்கான தேவை குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தினர் ஆய்வு செய்துள்ளனர். தெலங்கானாவில் அதிகளவில் 90 மி.லி. மது பாட்டில்கள் விற்பனையாவதாகவும், கேரளத்தில் இதற்கு போதிய வரவேற்பு இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.

கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தைக் குடித்ததால் 67 பேர் இறந்தனர். பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, தமிழக அரசின் மீது பல தரப்பிலும் விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

தமிழக அரசு டாஸ்மாக்கில் விற்கும் மதுவின் விலை உயர்வாக இருப்பதும் அதில் காரணமாக சொல்லப்பட்டது. இந்த நிலையில், தற்போது தமிழக அரசு குறைந்த விலையில் 90 மி.லி. ’கட்டிங்’ மது பாட்டில்களை விற்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com