கோவை : விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட்டால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அவர் மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
சென்னை செல்வதற்காக கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது, 'பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக பற்றி சில விமர்சனங்களை தெரிவித்துள்ளார். அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஏற்கனவே அறிவித்துள்ளது. அதற்கு காரணம் தெரிவித்துள்ளோம். இருந்தும் அதிமுகவை குறை சொல்லி திட்டமிட்டு அண்ணாமலை பேசியுள்ளார். இந்த தேர்தலில் அதிமுக போட்டிக்கு வந்தால் 3 அல்லது 4 ஆம் இடம் தான் வந்திருக்கும் என அவர் கூறியுள்ளார். மெத்த படித்தவர், மிகப் பெரிய அரசியல் ஞானி அவர். அவரது கணிப்பு அப்படி உள்ளது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் விழுப்புரத்தில் அதிமுக வேட்பாளர் சுமார் 6 ஆயிரம் வாக்கு மட்டுமே குறைவாக பெற்றுள்ளார். 2ம் இடத்தில் அதிமுக தான் உள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்புக்கு பல்வேறு காரணங்கள் கூறியுள்ளோம். ஈரோடு இடைத்தேர்தலில் திமுக எப்படி நடந்துகொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். ஆடு மாடு போல் மக்களை பட்டியில் அடைத்து பரிசு, பணம் கொடுத்து தேர்தலை சந்திதனர்.அப்போது அண்ணாமலை எங்கள் கூட்டணியில் தான் இருந்தார். அவருக்கும் இது நன்றாகத் தெரியும். இருந்தும் அதிமுக நிலைபாடு குறித்து இப்படி சொல்வது கண்டித்தக்கது.
அண்ணாமலை வந்த பிறகு தான் பாஜக வளர்ந்துள்ளது போல மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார். அது உண்மை அல்ல.இந்த தேர்தலில் கோவையில் அண்ணாமலை போட்டியிட்டு 1 லட்சம் வாக்குகள் அதிமுகவை விட குறைவாக பெற்றுள்ளார். பின் எப்படி வளர்ந்துள்ளது என கூற முடியும். முந்தைய தேர்தலில் 18.8 % பெற்ற பாஜக, இந்த தேர்தலில் 18.28 % பாஜக கூட்டணி பெற்றுள்ளது. அதன் வாக்கு சதவீதம் குறைந்து கொண்டு தான் வருகிறது.
தினம்தோறும் பேட்டி கொடுத்து மட்டுமே வருகிறார். மற்ற காட்சிகளை பற்றியே பேசி வருகிறார். எந்த மத்திய அரசு திட்டத்தையும் தமிழகத்தற்கு கொண்டு வராமல், வாயில் வடை சுட்டு வருகிறார். 100 நாளில் 500 வாக்குறிதுகள் என பொய் சொல்லி தான் வாக்கு பெற்றுள்ளார். உண்மையை சொல்லி வாக்கு பெறவில்லை. இப்போது மத்தியில் பாஜக ஆட்சி தான் உள்ளது. கொடுத்த வாக்குறுதியை செய்வாரா என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுபோன்ற தலைவரால் தான், 300க்கும் மேற்பட்ட தொகுதியை பெற்ற பாஜக, இப்போது சறுக்கி கூட்டணியில் ஆட்சியில் இருப்பதற்கு காரணம்' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை கடுமையாக தாக்கிப் பேசினார் எடப்பாடி பழனிசாமி.
தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்தவர்,
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பல்வேறு கட்சி தலைவர்களும் அதிமுக வாக்குகளை கேட்பது அவரவர் விருப்பம் என பதில் அளித்தார்.
அதிமுகவில் இருந்து விலகிச் சென்றவர்கள் மீண்டும் இணைக்கப்படுவார்களா என்ற கேள்விக்கு பதில் அளித்தவர், இது கார்ப்பரேட் கம்பெனி கிடையாது விலகியவர்களை உடனடியாக மீண்டும் சேர்த்துக் கொள்வதற்கு அதிமுகவிற்கு என விதிமுறைகள் உள்ளது பெரும்பான்மை தொண்டர்களின் எண்ணமாக பொதுக்குழுவின் ஒருமித்த தீர்மானத்தோடு தான் அவர்கள் விலக்கப்பட்டனர். மீண்டும் அவர்களை கட்சியில் சேர்க்கும் எண்ணம் இல்லை என உறுதியாக தெரிவித்தார்.
மேலும் சசிகலா அதிமுகவின் உறுப்பினரே இல்லை அவர் எப்படி கட்சியை ஒன்றிணைக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார்.2021 ஆம் ஆண்டு அரசியலில் இருந்து விலகி ஜெயலலிதாவின் செயல்களை முன்னெடுப்பேன் எனக் கூறியவர் இப்போது மீண்டும் கட்சியில் இணைவேன் என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அதிமுக பிரிந்த போது ஜானகி அவர்கள் வெளியிட்ட அறிக்கை போல் கட்சி தலைமைக்கு உடன்பட்டு செயல்படுவேன் என அவர் கூற வேண்டும் என தெரிவித்தார். திமுக அண்ணாமலை ரகசிய உறவு குறித்து கேள்விக்கு பதில் அளித்தவர், அது அவர்களுக்குத்தான் தெரியும் அவர்களுக்குள் கூட்டணி இருக்கலாம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் 30 ஆயிரம் கோடி அளவிற்கு பல துறைகளில் சம்பாதித்த பணத்தை முன்னாள் நிதி அமைச்சர் பி.டி.ஆர் வெளியிட்டார். அந்த உணமையெல்லாம் அதிமுக ஆட்சி அமைந்த பின்பு மக்களுக்கு தெரிய வரும்.ஆர்.எஸ்.பாரதி குறித்து பேசியவர், கல்வி செல்வத்தை கொச்சை படுத்தி அவர் பேசியுள்ளார். அது கண்டிக்கத்தக்கது. அண்மை காலமாக வயது முதிர்வு காரணமாக அவர் இப்படி பேசி வருகிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கள்ளச்சாராய விவகாரத்தை திமுக அரசு திட்டமிட்டு மறைக்கின்றது கள்ளக்குறிச்சியை தொடர்ந்து ஆனைமலை, விழுப்புரம், கடலூர் திருத்தணி ஆகிய பகுதிகளிலும் கள்ளச்சாராயம் வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இதுகுறித்து விசாரிக்க அதிமுக பிரதிநிதிகள் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது என்றார் எடப்பாடி பழனிசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.