

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவையொட்டி, அவரின் குடும்பத்தை நேரில் சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தாரை சந்தித்து பழனிசாமி ஆறுதல் கூறினார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) மாலை படுகொலை செய்யப்பட்டார். அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அவரின் உடல் செங்குன்றம் அருகேவுள்ள பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்குச் சென்று ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பெரம்பூரில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்குச் சென்றார். அங்கு அவரின் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர், ஆம்ஸ்ட்ராங்கை இழந்து தவிக்கும் அவரின் மனைவி பொற்கொடி மற்றும் குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது,
''ஆம்ஸ்ட்ராங் கொலை திட்டமிட்டு நடத்தப்பட்டதாகத் தெரிகிறது. கொலை செய்தவர்கள் எத்தனை பெரிய ஆளாக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தி அவர்களுக்கு இந்த அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
அண்மைக்காலமாக தமிழகத்தில் அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. பொதுமக்கள் உள்ளிட்ட யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
நெல்லையில் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கொலை, சேலத்தில் அதிமுக பகுதி செயலாளர் கொலை, இவற்றைத் தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் படுகொலை நடந்துள்ளது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உண்மைக் குற்றவாளிகள் இல்லை என பகுஜன் சமாஜ் கட்சியினர் மற்றும் அவரின் குடும்பத்தினர் தரப்பில் கூறப்படுகிறது. உண்மைக் குற்றவாளிகளை அரசு கண்டறிய வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.