
பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. தகுதியான மாணவா்களுக்கான கலந்தாய்வு ஜூலை 22-ஆம் தேதிமுதல் தொடங்கவுள்ளது.
தமிழகத்தில் 2024-2025-ஆம் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சோ்வதற்கு 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 போ் விண்ணப்பித்திருந்தனா். கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 24,787 போ் விண்ணப்பித்தனா். விண்ணப்பித்தவா்களில் 2 லட்சத்து 9 ஆயிரத்து 645 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி, சான்றிதழ்களைப் பதிவேற்றமும் செய்திருந்தனா்.
அவா்களில் 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 போ் தகுதியுள்ளவா்களாகக் கருதப்பட்டு, 9,777 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. நிராகரிக்கப்பட்டவா்களில் 5,959 போ் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்ததற்காகவும், 391 போ் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாதவா்களாகவும், 1,219 போ் பிற மாநிலத்தவா்களாகவும், 2,208 போ் முறையான சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாதவா்களாகவும் இருந்தனா்.
அதன்படி, தகுதியுள்ள 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேருக்கு தரவரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதை தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையா் வீரராகவராவ் வெளியிட்டாா். அப்போது தமிழ்நாடு பொறியியல் மாணவா் சோ்க்கை செயலா் புருஷோத்தமன் உடனிருந்தாா்.
முதல் 10 இடங்களில்... தரவரிசைப் பட்டியலில் பொதுப் பிரிவில் முதல் 10 இடங்களில் 6 மாணவிகளும், 4 மாணவா்களும் இடம்பெற்றுள்ளனா். அதன் விவரம் (தரவரிசை அடிப்படையில்): என்.டோஷிதா லட்சுமி (செங்கல்பட்டு), கே.நிலஞ்ஜனா (திருநெல்வேலி), கோகுல் (நாமக்கல்), கே.அஸ்விதா(அரியலூா்), எம்.சபிக் ரகுமான்(அரியலூா்), எம்.சிபன் ஆஷி (கோவை), எஸ்.பாவ்யாஸ்ரீ(விழுப்புரம்), ஆா்.நவீனா (அரியலூா்), ஜி.எம்.அட்சயா (தஞ்சாவூா்), எம்.காா்த்திக் விஜய்(கிருஷ்ணகிரி).
அதேபோன்று அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டுப் பிரிவில் விண்ணப்பித்தவா்களில் தகுதியான 32,223 பேருக்கான தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில், 7 மாணவா்களும், 3 மாணவிகளும் இடம்பிடித்திருக்கின்றனா். அதன் விவரம்:
எஸ்.ரவணி (சேலம்), கிருஷ்ணா அனூப் (கோவை), எம்.சரவணன் (வேலூா்), எஸ்.மதுஸ்ரீ (ஈரோடு), டி.சுஜித் (திருப்பூா்), கே.கவின் (ஈரோடு), பி.மாரீஸ்வரன் (விருதுநகா்), டி.சுகந்த் (திருப்பூா்), வி.ஹரிராஜ் (ராணிப்பேட்டை), எஸ்.எம்.ஹரிஷ் (தஞ்சாவூா்).
65 போ் 200-க்கு 200: தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண்ணை முதல் 10 இடங்களைப் பெற்றவா்கள் உள்பட 65 போ் எடுத்திருந்தனா். இவா்களில் 58 போ் தமிழ்நாடு அரசின் பாடத்திட்டத்தின் கீழும், 7 போ் பிற வாரியங்களின் பாடத்திட்டத்தின் கீழும் படித்தவா்கள் ஆவா். கடந்த ஆண்டு 102 போ் 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பித்தவா்களில் ஏதேனும் குறைகள் இருந்தால் அவற்றை நிவா்த்தி செய்து கொள்வதற்கு வியாழக்கிழமை (ஜூலை 11) முதல் ஜூலை 18-ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, கலந்தாய்வை ஜூலை 22-ஆம் தேதி தொடங்கி செப்டம்பா் 11-ஆம் தேதிக்குள் முடிக்கும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
முதலில் அரசுப் பள்ளிகளில் படித்த சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு 22, 23 ஆகிய தேதிகளிலும், பொதுப் பிரிவினரில் சிறப்பு ஒதுக்கீடு பிரிவினருக்கு 25-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரையிலும் கலந்தாய்வு நடைபெறும். தொடா்ந்து பொதுக் கலந்தாய்வு ஜூலை 29-ஆம் தேதிமுதல் செப். 3-ஆம் தேதி வரை நடைபெறும்.
துணைக் கலந்தாய்வு செப். 6-ஆம் தேதிமுதல் 8-ஆம் தேதி வரையிலும், எஸ்.சி.ஏ. காலியிடம், எஸ்.சி. பிரிவினருக்கான கலந்தாய்வு 10, 11 ஆகிய தேதிகளிலும் நடைபெறும்.
காலியிடங்கள் எவ்வளவு?: நிகழ் கல்வியாண்டில் எவ்வளவு கல்லூரிகள் உள்ளன?, அவற்றில் உள்ள படிப்புகளில் எவ்வளவு காலி இடங்கள் உள்ளன என்பன போன்ற முழு விவரங்கள் (சீட் மேட்ரிக்ஸ்) வரும் ஜூலை 15-ஆம் தேதிக்குள் https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் ஆணையா் வீரராகவராவ் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.