
மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் பிரச்னையால் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு மீண்டும் போர்டிங் பாஸ் கணினி மூலம் வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது.
சென்னை, மதுரை, கோவை உள்பட நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் மைக்ரோசாப்ட் பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்பு சீரடைந்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்திருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில், மீண்டும் கணினி மூலம் போர்டிங் பாஸ் வழங்கும் பணி தொடங்கியிருக்கிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ இயங்குதள மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் உலகம் முழுவதும் விமான நிலையங்களும், தகவல் தொழில்நுட்ப (ஐடி) செயல்பாடுகளும், வெள்ளிக்கிழமை முற்றிலும் முடங்கிப்போனது.
இண்டிகோ, ஸ்பைஸ்-ஜெட், ஆகாஸா ஏா் போன்ற இந்திய விமான நிறுவனங்களின் சேவைகள் மைக்ரோசாஃப்ட் மென்பொருள் செயலிழப்பால் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
சில விமான நிலையங்களில் பயணிகள் விமானத்தில் ஏறுவதற்கான ‘போா்டிங் பாஸ்’ விமான நிறுவன அதிகாரிகளால் கையால் எழுதித் தரப்பட்டது. இதனால், விமான நிலையங்கள் பயணிகளால் நிரம்பி வழிந்தன. இந்த நிலையில், இன்று நிலைமை ஓரளவுக்கு சீரடைந்து வரும் நிலையில், சென்னையில் கணினி மூலம் போர்டிங் பாஸ் வழங்கத் தொடங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தொழில்நுட்பச் செயலிழப்புக்கான அடிப்படை காரணம் கண்டறியப்பட்டு, சரிசெய்யப்பட்டு வருவதாக மைக்ரோசாஃப்ட் கூறியிருந்தது.
கணினி மற்றும் மடிக்கணினிகளில் இயங்குதளமாக ( ஆபரேட்டிங் சிஸ்டம்-ஓஎஸ்) மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ‘விண்டோஸ்’ மென்பொருளின் பல்வேறு பதிப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மைக்ரோசாஃப்ட் நிறுவன மென்பொருள்களுக்கு இணையப் பாதுகாப்புச் சேவையை ‘கிரௌட் ஸ்ட்ரைக்’ நிறுவனம் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.