மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு போதிய திட்டங்களை அறிவிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
2019 முதல் 2024 வரை திமுக எம்.பி.க்கள் தமிழகத்துக்கு திட்டங்களைப் பெற்றுத்தர எந்தவித நடவடிக்கையையும் மக்களவையில் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நடப்பு நிதி ஆண்டில் 6.5 முதல் 7 சதவீதம் வரை நிலையான விலை விகிதப்படி (Constant prices) பொருளாதார வளர்ச்சி விகிதம் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 8.2 சதவீதத்தைவிட குறைவாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
கோதாவரி-காவிரி இணைப்பு போன்ற திட்டங்கள் தமிழகத்தினால் முன்மொழிந்த போதிலும், மத்திய அரசு இதனை கண்டுகொள்ளாமல் விட்டது, தமிழக விவசாயிகளுக்கு பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.
இந்த தருணத்தில் GST வரிவிதிப்பு முறை கொண்டு வந்த பின்பும், தொழில் முனைவோர் பல்வேறு நடைமுறை சிரமங்களைத் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர்.
காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டம் பற்றி குடியரசுத் தலைவர் அறிவிப்பில் அறிவித்ததோடு, இத்திட்டத்திற்கு தேவையான நிதியினை ஒதுக்காமல் தமிழகத்திற்கு மத்திய அரசு பாரபட்சம் காட்டியுள்ளது.
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பிகார், அஸ்ஸாம், ஹிமாச்சல் பிரதேஷ், உத்திரகாண்ட், சிக்கிம் போன்ற மாநிலங்களுக்கே பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற திட்டங்கள் எதுவும் தமிழகத்திற்கு அறிவிக்கப்படாதது ஒரு பெருத்த ஏமாற்றமாகும்.
மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் அளித்த பல வாக்குறுதிகள் இந்த வரவு, செலவுத் திட்ட அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முதியோர்களுக்கு கொரோனா காலத்திற்கு முன்பு நடைமுறையில் இருந்த சலுகைகளையாவது திரும்ப அளித்திருக்கலாம்.
திமுக-கூட்டணிக் கட்சிகளுக்கு 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தும், தமிழகத்திற்கு எந்த ஒரு திட்டத்தையும் பெற்றுத் தராதது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது
திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி-க்கள் நாடாளுமன்றத்தில் 2019 முதல் 2024-ஆம் ஆண்டுவரை தமிழகத்தின் நன்மைக்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாமல் இருந்தது போல், அமைதியாக காலம் தள்ளுவார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.