
நடிகர் விஜய் கட்சி துவங்கப்பட்டுள்ளதால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இயற்கை மருத்துவமனையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குமரி ஆனந்தன் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிகிச்சை பெற்று வரும் தன்னுடைய தந்தையை, தெலங்கானா முன்னாள் ஆளுநரும் தமிழக பாஜக முன்னாள் தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களுடன் தமிழிசை பேசியதாவது:
”காவிரியில் இருந்து கர்நாடக அரசு தண்ணீர் தரவில்லை என்றாலும் கூட, இயற்கை அன்னையால் காவிரியில் அதிக அளவில் தற்போது தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
இந்த தண்ணீரை பாதுகாக்க தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மேலும் இது போன்று தமிழகத்தில் மழைக் காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க காவிரி உள்பட ஆறுகளில் தடுப்பணைகளை கட்ட வேண்டும்.
ஆந்திர மாநிலம் போலவரம் நீர்ப்பாசன திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்து நிதி உதவி வழங்கியுள்ளது. இந்த திட்டத்தினால் ஆந்திரம், தெலுங்கானா மாநிலத்துக்கு மட்டுமல்லாமல் தமிழகத்துக்கும் குடிநீருக்கு ஆதாரமாக அந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
இதுபோன்ற தொலைநோக்கு திட்டங்களை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். கோதாவரி தண்ணீர் அதிகமாக கடலில் கலக்கிறது. அதிலிருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என அன்றைய தெலங்கானா முதலமைச்சரிடம் பேசி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக் குறியாக உள்ளது. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
மேலும் தமிழகத்தில் அரசியல் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளச்சாராயம் வழக்கு, நெல்லையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் விஜயகுமார் படுகொலை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகளில் உண்மையான குற்றவாளிகளை தமிழக அரசு இன்னும் கைது செய்யவில்லை.
எனவே தமிழக அரசு இதற்கு காரணமானவர்களை உடனடியாக கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்று கூறினார்.
தமிழக முதலமைச்சர் அரசியல் ஆதாயத்திற்காக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லவில்லை. நிதி ஆயோக் கூட்டம் மத்திய மாநில அரசுகளுக்கு பாலமான ஒரு கூட்டம்.
மத்திய மாநில அரசுகளின் பொருளாதாரத்திற்கான தீவிர ஆலோசனை கூட்டம் இந்தக் கூட்டத்தில் என்னென்ன தேவை என்பதை நேரடியாக செல்லக்கூடிய ஒரு கூட்டம்.
இதனை ஒரு அரசியல் கூட்டம் போல நினைத்து எல்லா எதிர்க்கட்சி முதலமைச்சர்களும் அதனை புறக்கணித்து மக்களின் நலனையும் புறக்கணித்து உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளரின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தமிழிசை, நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். பாஜகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை. பாஜக வளர்ந்த கட்சி, பாஜகவின் கொள்கைகள் வேறு. எனவே நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததினால் பாஜகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.