
ராதிகா சரத்குமார் வெற்றிபெற வேண்டி நடிகர் சரத்குமார் அங்க பிரதட்சிணம் மேற்கொண்டார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப். 19 ஆம் தேதி நடைபெற்றது.
விருதுநகர் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸின் மாணிக்கம் தாகூர், அதிமுக கூட்டணி சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன், பாஜக சார்பில் ராதிகா சரத்குமார் ஆகியோர் போட்டியிட்டனர்.
தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 4) நடைபெறுகிறது.
இந்நிலையில், தனது மனைவி ராதிகா சரத்குமார் வெற்றிபெற வேண்டியும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வேண்டியும் நடிகர் சரத்குமார் விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயிலில் அங்க பிரதட்சிணம் மேற்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலிலும் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் இருவரும் சாமி தரிசனம் செய்தனர்.
அதன்பின் செய்தியாளர்களுடன் நடிகை ராதிகா சரத்குமார் பேசுகையில், "வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு சாமி தரிசனம் செய்ய ஆண்டாள் கோயிலுக்கு வந்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை சிவகங்கை மாவட்டம் சிராவயலில் உள்ள குலதெய்வம் கோயிலில் வழிபாடு நடத்தினோம். பிரசாரத்தின் போதே ஆண்டாள் கோவிலுக்கு வர இருந்தோம். நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமர் ஆகவும், தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற ஆண்டாள் தாயாரிடம் பிரார்த்தனை செய்தோம்" என்றார்.
தொடர்ந்து ராதிகாவிடம் விருதுநகர் தொகுதியில் வெற்றி வாய்ப்பு குறித்து கேள்வி எழுப்பியதற்கு மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.