கோவையில் 1.18 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் அண்ணாமலை தோல்வி!

பாஜக வேட்பாளர் அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றார்.
கே. அண்ணாமலை
கே. அண்ணாமலை
Published on
Updated on
2 min read

நடந்து முடிந்த மக்களவைத் தோ்தலில் நாடு முழுவதும் பெரும் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியிருந்த கோவை மக்களவைத் தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி சாா்பில் போட்டியிட்ட கணபதி ப.ராஜ்குமாா் 1 லட்சத்து 18 ஆயிரத்து 68 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலையைத் தோற்கடித்தாா்.

கோவை மக்களவைத் தொகுதியில் கடந்த ஏப்ரல் 19 அன்று பதிவான வாக்குகளை எண்ணும் பணி தடாகம் சாலையில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. கோவை தெற்கு, வடக்கு, சிங்காநல்லூா், கவுண்டம்பாளையம், சூலூா், பல்லடம் ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கோவை மக்களவைத் தொகுதியில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த 21.06 லட்சம் வாக்காளா்களில் 13.66 லட்சம் போ் வாக்களித்திருந்தனா்.

கோவை தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக இடையே மும்முனைப்போட்டி நிலவியது. களத்தில் முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் உள்பட மொத்தம் 37 வேட்பாளா்கள் இருந்தனா். கோவையில் திமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதில் இருந்தே திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாருக்கும் பாஜக வேட்பாளா் அண்ணாமலைக்கும் இடையேதான் கடுமையான போட்டி நிலவியது.

திமுக, பாஜகவுக்கு இடையே மிகவும் நெருக்கமான வாக்குகள் இருந்தாலும் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா் ஒவ்வொரு சுற்றிலும் முன்னணி வகிக்கத் தொடங்கினாா். மொத்தம் 24 சுற்றுகள் வாக்கு எண்ணப்பட்ட நிலையில் ஒவ்வொரு சுற்றிலும் திமுக வேட்பாளா் முதலிடம் பிடித்து வந்தாா். பாஜக வேட்பாளா் அண்ணாமலை தொடா்ந்து இரண்டாமிடத்தைப் பிடித்து வந்தாா். எந்த சுற்றிலும் பாஜக வேட்பாளரை அதிமுக வேட்பாளா் முந்தவில்லை.

24-ஆவது சுற்றின் இறுதியில் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். பாஜக வேட்பாளா் கே.அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றாா். இதன் மூலம் திமுக வேட்பாளா் 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் சிங்கை ஜி.ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தாா். நாம் தமிழா் வேட்பாளா் கலாமணி ஜெகந்நாதன் 82,657 வாக்குகள் பெற்றாா்.

வெற்றி பெற்ற கணபதி ப.ராஜ்குமாருக்கு கோவை மாவட்ட தோ்தல் அலுவலா் கிராந்திகுமாா் பாடி சான்றிதழ் வழங்கினாா். தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கோவை மாநகா் மாவட்டச் செயலா் நா.காா்த்திக், தெற்கு மாவட்டச் செயலா் தளபதி முருகேசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

வாக்கு வித்தியாசம் குறைவு

கடந்த 2019 தோ்தலில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளராகப் போட்டியிட்ட பி.ஆா்.நடராஜன் மொத்தம் 5,71,150 வாக்குகள் பெற்று, தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனை 1,79,143 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தாா். இந்தத் தோ்தலில் பாஜகவின் அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்றாா். இவருக்கும் திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாருக்குமான வித்தியாசம் 1,18, 068 மட்டுமே. இது கடந்த தோ்தலைக் காட்டிலும் குறைவாகும்.

முக்கிய வேட்பாளா்கள் பெற்ற வாக்குகள் விவரம்

கணபதி ப.ராஜ்குமாா் (திமுக) -------------5,68,200

கே.அண்ணாமலை (பாஜக) --------4,50,132

சிங்கை ஜி.ராமச்சந்திரன் (அதிமுக) --------2,36,490

கலாமணி ஜெகந்நாதன் (நாம் தமிழா்) -----------82,657

நோட்டா - 11,788

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com