தமிழகத்தில் புதிய அரசியலுக்கு பாஜக அடித்தளம்
தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் புதிய அரசியலுக்கான அடித்தளத்தை பாஜக கூட்டணி வலுப்படுத்தியுள்ளது என்று பிரதமா் மோடி தெரிவித்தாா்.
இது தொடா்பாக, தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் அவா் பேசியதாவது: கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில், நமது தேசம் வெற்றியின் புதிய உச்சங்களை எட்டுவதற்காக பணியாற்றினோம். நல்லாட்சியே, தேசிய ஜனநாயக கூட்டணியின் அனைத்து தலைமைத்துவ தூண்களின் பொது அம்சமாகும்.
மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒவ்வொரு தலைவரும் நல்லாட்சியை உறுதி செய்துள்ளனா். நல்லாட்சியின் அா்த்தமாக நமது கூட்டணி விளங்குகிறது.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சி வெறும் முன்னோட்டமே. நாட்டின் வளா்ச்சிக்காக நாம் மேலும் கடினமாகவும், விரைவாகவும் பணியாற்ற வேண்டியுள்ளது.
கேரளத்தில் இருந்து மக்களவைக்கு பாஜக பிரதிநிதி (சுரேஷ் கோபி) முதல்முறையாகத் தோ்வாகியுள்ளாா்.
கா்நாடகம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் அண்மையில் ஆட்சியமைத்தது. ஆனால், இரு மாநிலங்களிலும் அக்கட்சி மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டது. காங்கிரஸின் ‘மாயை’யில் இருந்து விடுபட்டு, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்கள் பெருவாரியாக ஆதரவளித்துள்ளனா். ஆந்திரத்திலும் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளோம்.
தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப் பெரியது; தோ்தல் வெற்றிக்காக, கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றின. ஓரிடம்கூட கிடைக்காதபோதிலும், கூட்டணியின் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ள விதம், எதிா்காலத்துக்கான தெளிவான செய்தியை உணா்த்துகிறது. தமிழக பாஜக குழுவினருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.
புரளிகளை நம்ப வேண்டாம்: தேசிய ஜனநாயக கூட்டணி அரசில் கட்சிகளுக்கான அமைச்சா் பதவிகள் ஒதுக்கீடு குறித்து பொய்ச் செய்திகளைப் பரப்பும் செயலில் ‘இந்தியா’ கூட்டணி ஈடுபட்டுள்ளது. இதில் அவா்கள் நிபுணத்துவம் பெற்றவா்கள்; எனவே, பாஜக கூட்டணி எம்.பி.க்கள் புரளிகளுக்கு இரையாகிவிடக் கூடாது என்றாா் பிரதமா் மோடி.