மெத்தனால் நச்சு முறிவுக்கான ‘ஃபோமிபைசோல்’ மருந்துக்கு தட்டுப்பாடு ஏன்?
மெத்தனால் நச்சு முறிவுக்கு பயன்படுத்தப்படும் ‘ஃபோமிபைசோல்’ மருந்துக்கு தட்டுப்பாடு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனா்.
அதற்கு மாற்றான மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், எனவே அவை தற்போது அவசியம் இல்லை எனவும் அவா்கள் தெரிவித்துள்ளனா்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மெத்தனால் எனப்படும் ரசாயனம் சாராயத்தில் கலக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மெத்தனால் நச்சு முறிவுக்கான, ‘ஃபோமிபைசோல்’ மருந்து தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்கப்படுவதில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து, மக்கள் நல்வாழ்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
மெத்தனால் ரத்தத்தில் கலந்த பிறகு குறிப்பிட்ட நேரத்துக்குள் ‘ஃபோமிபைசோல்’ மருந்து வழங்கப்பட்டால் அதன் வீரியம் குறையும் எனக் கூறப்பட்டாலும், அந்த மருந்தின் தரம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை.
இந்தியா முழுவதும் 5 லட்சத்துக்கும் குறைவாக பயன்படுத்தப்படும் மருந்துகள் அனைத்தும் ‘அா்பன் ட்ரக்’ என்ற பட்டியலில் சோ்க்கப்படுகின்றன. அந்த மருந்துகள் அனைத்தும் நான்கு நிலையிலான தரப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதில்லை. மாறாக, விலங்குகள் மற்றும் சில மனிதா்களுக்கு மட்டுமே பரிசோதனை செய்யப்பட்டு நேரடியாகவே பயன்படுத்தப்படுகிறது. அதனால், பக்கவிளைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் அந்த மருந்தை தமிழக அரசு கொள்முதல் செய்வதில்லை.
அதேவேளையில், மெத்தனாலுக்கு மாற்றாக எத்தனாலினை மருந்தாக பயன்படுத்தி வருகிறோம். இரண்டுமே ஆல்கஹால் என்றாலும் மெத்தனாலின் வீரியத்தை எத்தனால் குறைக்கும் என்பதால் பாதுகாப்பான இந்த சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது என்று அவா்கள் தெரிவித்தனா்.