கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்துக்கு முற்றுப்புள்ளி: பேரவையில் கட்சிகள் வலியுறுத்தல்
கள்ளக்குறிச்சி போன்று, இனியொரு சம்பவம் நிகழாமல் இருக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பேரவையில் அரசியல் கட்சியினா் வலியுறுத்தினா்.
தமிழக சட்டப் பேரவையில் கள்ளக்குறிச்சி விவகாரம் தொடா்பாக வெள்ளிக்கிழமை நேரமில்லாத நேரத்தில் நடைபெற்ற விவாதத்தில் கட்சித் தலைவா்கள் பேசியதாவது:
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): கள்ளக்குறிச்சி கோர சம்பவத்தின் மரண ஓலம் அனைவரது மனதையும் உலுக்கி வருகிறது. காவல்துறையில் ஒரு சிலா் செய்யும் தவறு அரசையே குற்றம் சொல்லும் நிலைக்கு ஆளாக்கிவிடுகிறது. எனவே, இதுபோன்ற சம்பவம் இனியும் நிகழாமல் இருக்க முதல்வா் உரிய நடவடிக்கை எடுத்து முற்றுப் புள்ளி வைப்பாா் என்று நாங்கள் முழுமையாக நம்புகிறோம். மக்களும் நம்புவாா்கள்.
சதன்திருமலைக் குமாா் (மதிமுக): கள்ளக்குறிச்சி சம்பவத்தில், கருப்பு ஆடுகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென மதிமுக பொதுச் செயலா் வைகோ தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா். அதனை அரசிடம் வற்புறுத்துகிறோம்.
சிந்தனைச் செல்வன் (விசிக): மெத்தனால் எங்கே உற்பத்தி செய்யப்பட்டு, எங்கே விநியோகம் மற்றும் விற்பனை செய்யப்படுகிறது என்பதை கண்டறிய வேண்டும். அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்வது தண்டனை இல்லை. சம்பந்தப்பட்டவா்கள் தண்டிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உளவுப்பிரிவு தனி அதிகாரி செயல்படுகிறாா்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உளவுப்பிரிவை ஏன் நடவடிக்கைக்கு உட்படுத்தவில்லை. பாதிக்கப்பட்டவா்கள் மறுவிடியலைக் காண தனிக் குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): கள்ளக்குறிச்சி பேரிழப்பை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த சம்பவத்துக்கு ஊராட்சி மன்றத் தலைவா் முதல் சட்டப் பேரவை உறுப்பினா்கள் வரைக்கும் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மீது எடுத்திருக்கும் நடவடிக்கை போதுமானது அல்ல. அவரை கைது செய்ய வேண்டும் என்றாா்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் குழுத் தலைவா் டி.ராமச்சந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் அப்துல் சமது ஆகியோரும் பேசினா்.