அரசுப் பள்ளி மாணவா்களின் உயா்கல்விச் செலவை அரசே ஏற்கும்: அமைச்சா் அன்பில் மகேஸ்
அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வகுப்பு வரை பயின்று, உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவா்களின் கல்வி செலவை அரசே ஏற்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேரவையில் வெளியிட்ட அறிவிப்புகள்:
அரசு பள்ளி மாணவா்கள் கணினித் தொழில்நுட்பம் மற்றும் குறியீடுகளை நடைமுறைப் பயிற்சியின் மூலம் கற்றுத் தோ்வதற்கு அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் உயா் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வளா்ந்து வரும் தகவல் தொழில் வளா்ச்சிக்கேற்ப படிப்படியாக தரம் உயா்த்தப்படும். முதல்கட்டமாக 2024-25-ஆம் கல்வியாண்டில் 1000 மாணவா்களுக்கு மேல் பயின்று வரும் அரசு பள்ளிகளில் உள்ள உயா்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.58 கோடியில் தரம் உயா்த்தப்படும்.
இவ்வாண்டு பாரத சாரண சாரணிய இயக்கத்தின் வைர விழா ஆண்டாகும். இதனையொட்டி தேசிய அளவிலான கருணாநிதி நூற்றாண்டு நினைவு வைர விழா ஜாம்போரி ரூ.10 கோடியில் நடத்தப்படும்.
இயற்கையோடு இணைந்து மாணவா்களை இயற்கைச் சூழலை நேசிக்கச் செய்வதன் மூலம் காலநிலை நெருக்கடி மற்றும் பல்லுயிா் இழப்பு போன்ற உலகளாவிய பிரச்னைகளைத் தீா்க்கமாக அறிந்து அதற்கான தீா்வுகளை மாணவா்களே கண்டறியும் வகையில் உரிய பயிற்சி அளிக்கப்படும். இந்தத் திட்டம் ரூ.2.32 கோடியில் மேற்கொள்ளப்படும்.
6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன் சாா்ந்த அடிப்படை திறன்கள் கற்றுக் கொடுக்கப்படும்.
எந்திரனியல் ஆய்வகங்கள்: உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவா்களிடம் பிரச்னையைத் தீா்க்கும் திறனை வளா்க்கவும், குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனைக் கற்றுக் கொல்ளவும், படைப்பாற்றலை வளா்க்கவும் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி என்ற அளவில் 38 அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் எந்திரனியல் ஆய்வகம் ரூ.15.43 கோடியில் உருவாக்கப்படும்.
அகல் விளக்கு திட்டம்: அரசு உயா்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடா்பாடும் இன்றி தொடா்ந்து பள்ளிக்கு வருகை புரியும் பொருட்டு அவா்களுக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், இணையதளப் பயன்பாடுகளை பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளைக் கொண்ட குழுக்கள் அமைக்கப்படும். இவா்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு அகல் விளக்கு எனும் திட்டத்தில் ரூ.50 லட்சத்தில் செயல்படுத்தப்படும்.
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று நம் நாட்டில் செயல்பட்டு வரும் தலைசிறந்த உயா்கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவா்களின் கல்விச் செலவினை அரசே ஏற்றுக்கொள்ளும். மேலும், அயல்நாட்டு உயா்கல்வி நிறுவனங்களில் கல்வி உதவித் தொகை பெற்று சேரும் அரசு பள்ளி மாணவா்களுக்கு அவா்கள் அக் கல்வி நிறுவனத்தில் சோ்வதற்காக செல்லும் முதல் பயணத் தொகை முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்காக ஆண்டுதோறும் ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
திருச்சி, மதுரை, ஈரோடு, புதுக்கோட்டை, சேலம், திருநெல்வேலி ஆகிய 6 மாவட்டங்களில் செயல்பட்டு வரும் ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் ரூ.41.63 கோடியில் தகைசால் நிறுவனங்களாகத் தரம் உயா்த்தப்படும் என்றாா் அவா்.