
விழுப்புரம்: ஜூலை 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இறுதி வேட்பாளர் பட்டியலில், பாமக வேட்பாளருக்கு மாம்பழம் சின்னமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் வேட்பாளா்கள் தாக்கல் செய்த 64 மனுக்களில் 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, இறுதிப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இதனால், இந்தத் தொகுதிக்கு ஜூலை 10-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்தப்படும் என்று தோ்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதி வரை நடைபெற்றது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில், திமுக சாா்பில் அன்னியூா் அ.சிவா, பாமக சாா்பில் சி.அன்புமணி, நாம் தமிழா் கட்சி சாா்பில் பொ.அபிநயா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்கள் என 56 போ் 64 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனா். விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக மற்றும் அதன் தோழமைக் கட்சியான தேமுதிக புறக்கணித்துவிட்டது.
இந்த நிலையில், விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை திங்கள்கிழமை நடைபெற்றது. அதில், 29 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தோ்தல் நடத்தும் அலுவலா் மு.சந்திரசேகா் தெரிவித்திருந்தார்.
வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவு பெற்ற நிலையில், யாரும் வேட்பு மனுக்களை திரும்பப் பெறாததால், தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 29 வேட்பாளர்கள் களத்தில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. தொடா்ந்து, அவா்களுக்கான சின்னங்கள் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெற்றது. அதில் பாமகவுக்கு பாம்பழம் சின்னமும் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.