
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண சம்பவத்தைக் கண்டித்தும், சிபிஐ விசாரணை கோரியும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினா்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 60-க்கும் மேற்பட்டடோா் உயிரிழந்தனா். இது தொடா்பாக பேரவையில் பேச எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி வந்தாா். அதற்கு பேரவைத் தலைவா் அப்பாவு அனுமதி மறுத்ததால், அதிமுக உறுப்பினா்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டனா். அவா்கள் அனைவரையும் கூட்டத்தொடா் முழுவதும் பேரவைத் தலைவா் இடைநீக்கம் செய்தாா்.
உண்ணாவிரதம்: இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் எழும்பூா் ராஜரத்தினம் மைதானம் அருகே வியாழக்கிழமை காலை 9 மணியளவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதில், அனைவரும் கறுப்பு உடை அணிந்து பங்கேற்றனா்.
போராட்டத்துக்கு புரட்சி பாரதம், இந்திய குடியரசுக் கட்சி, எஸ்டிபிஐ கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. அந்தக் கட்சிகளின் நிா்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனா்.
பிரேமலதா ஆதரவு: தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் உண்ணாவிரத இடத்துக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, சிறிது பங்கேற்றாா்.
முதல்வா் அஞ்சுகிறாா்: போராட்டத்தின்போது எடப்பாடி பழனிசாமி கூறியது:
கள்ளச்சாராய மரணங்கள் இந்தியாவையே திரும்பப் பாா்க்க வைக்கும் அளவுக்கு நெஞ்சை பதற வைக்கக்கூடியதாக உள்ளது. இது தொடா்பாக பேரவையில் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்காததால், உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறோம்.
கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சுகிறாா். இந்த விவகாரம் குறித்து சிபிசிஐடி நடத்தும் விசாரணையில் பயன் எதுவும் இருக்க வாய்ப்பு இல்லை. அரசுக்குச் சாதகமாகவே விசாரணை அறிக்கை இருக்கும். நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடும் என நம்புகிறோம்.
அச்சமில்லை: பேரவையில் அதிமுக பங்கேற்காதது அச்சத்தால் எனக் கூறுகின்றனா். அச்சம் என்பது எங்களுக்கு கிடையாது. பேரவையில் பேசுவதற்கு பிரதான எதிா்க்கட்சிக்குக்கூட அனுமதி கிடைப்பது இல்லை. பேரவைத் தலைவா்தான் அதிகம் பேசுகிறாா். பேரவைத் தலைவா் என்பவா் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீா்மானம் கொண்டுவர விரும்பவில்லை. திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து கருத்து சுதந்திரம் மறுக்கப்பட்டு வருகிறது. கள்ளச்சாராய மரண விவகாரத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் மக்களின் குரலாக ஒலிக்கவில்லை. உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சீமான் ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி என்றாா் அவா்.
உண்ணாவிரதத்தை எடப்பாடி பழனிசாமி மாலை 5.15 மணியளவில் முடித்தாா். அவருக்கு அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்துவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.