குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்கும் என்றார் ஸ்டாலின்
குற்றங்களைத் தடுக்க நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும்: மு.க. ஸ்டாலின்

குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்கும், எனவே, வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன் என்றார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப் பேரவையில், இன்று காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றிய போது, காவல் துறையில் கடந்த மூன்றாண்டு காலத்தில் மொத்தம் 190 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 179 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளன.

கடந்த ஆண்டு மட்டும் காவல் துறையில் பல்வேறு சீர்திருத்த முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டன.

மாணவர்களைப் பண்படுத்தும் சிற்பி திட்டம் மூலமாக மாணவர்களுக்கு ஒழுக்கப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

சிறு குற்றம் செய்யும் குற்றவாளிகளைத் திருத்தி அவர்களது எதிர்காலத்தை சிறப்பானதாக மாற்றுவதற்கு பறவை திட்டம் தீட்டப்பட்டது.

பதிவேடு குற்றவாளிகள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க பருந்து திட்டம் செயல்பாட்டில் உள்ளது.

காவலர்களது நன்மைக்காக ஸ்மார்ட் காவலர் செயலி உருவாக்கப்பட்டது. விடுப்புகளை முறைப்படுத்த விண்ணப்ப செயலி அறிமுகம் செய்யப்பட்டது.

காவலர்களின் மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சியாக மகிழ்ச்சி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது.

மகளிர் காவலர்களுக்காக ஆனந்தம் திட்டம் அமலில் உள்ளது.

வாகனத் திருட்டைக் கண்காணிக்க ஐ.வி.எம்.எஸ். திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.

பொதுமக்களின் குறைகளை நிவர்த்தி செய்யவும், புகார்களை விரைந்து விசாரிக்கவும், நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்கவும் இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

குற்றங்களைக் குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்களைத் தடுக்கும் துறையாக செயல்பட வேண்டுமென்று காவல் துறை அதிகாரிகள் மாநாட்டில், ஆலோசனைக் கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். குற்றங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது அல்ல; குற்ற எண்ணத்தைக் குறைப்பது காவல் துறையின் பணியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கட்டளையிட்ட வகையில் குற்றச்சூழல் கட்டுக்குள் உள்ளது. வருங்காலங்களில் குற்றங்களைத் தடுக்க மேலும் நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

இந்த ஆண்டு மானியக் கோரிக்கையில் 100 அறிவிப்புகள் உள்ளன. அதில் சிலவற்றை மட்டும் இப்போது அறிவிக்க விரும்புகிறேன். மீதமுள்ள அறிவிப்புகளை நான் படித்ததாகக் கருதி அவைக்குறிப்பில் சேர்த்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் மற்றும் ஏற்காடு ஆகிய இடங்களில் புதிய போக்குவரத்துக் காவல் நிலையங்கள், கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனை புறக்காவல் நிலையம், படப்பை, ஆதமங்கலம் புதூர், திருப்பரங்குன்றம் கோவில் ஆகிய இடங்களில் புதிய காவல் நிலையங்கள் அமைக்கப்படும்.

நீர்வளத் துறை அமைச்சர் இன்று காலை நான் அவைக்கு வந்தவுடன், நெடுநாள் கோரிக்கை என்று தெரிவித்து, என்னிடம் ஒரு கோரிக்கையைக் கொடுத்தார். அதாவது, பேரணாம்பட்டில் இருக்கக்கூடிய காவல் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றிட வேண்டுமென்று கோரிக்கை வைத்திருக்கிறார். அது நிச்சயமாகப் பரிசீலிக்கப்படும்.

கொளத்தூர், கேளம்பாக்கம், செங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்படும். தாம்பரம் காவல் ஆணையரகத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.

கோவை - பொள்ளாச்சி, திருப்பூர் - நல்லூர் ஆகிய இடங்களில் 229 காவல் குடியிருப்புகள் கட்டப்படும்.

தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் ஆளிநர்கள் பணியின்போது உயிரிழப்போ, உடலுறுப்பு இழப்போ, காயமோ ஏற்பட்டால் வழங்கப்படும் கருணைத் தொகை உயர்த்தப்படும். சிறப்பு இலக்குப் படையில் பணியாற்றும் ஆளிநர்களுக்கும் அத்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

ஊர்க்காவல் படையில் பணியாற்றும் ஆளிநர்கள் உயிரிழக்கும்போது அவர்கள் குடும்பத்திற்கு தமிழ்நாடு ஊர்க்காவல் படை நலன் மற்றும் கருணைக் கொடை நிதியிலிருந்து வழங்கப்படும் இழப்பீடு 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாகவும், காயமுற்றவர்களுக்கான நிதி 10 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும்.

கோவை மாநகராட்சியை விபத்தில்லாத மாநகரமாக மாற்ற 5 கோடி ரூபாய் மதிப்பில் செயல்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

தஞ்சாவூர் வட்டார தடய அறிவியல் ஆய்வகத்தில் 5 கோடியே 21 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆயப்பிரிவு ஒன்று உருவாக்கப்படும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் பயன்பாட்டிற்காக 1,500 தற்காப்பு உடைகளும், மீட்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு சிறிய உபகரணங்களுடன் கூடிய 3,000 மீட்பு உடைகளும் 4 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் வழங்கப்படும்.

ஏரல், கருமத்தம்பட்டி, மடத்துக்குளம், கோவளம், படப்பை, திருநெல்வேலி மாநகரம், புதுவயல் உள்ளிட்ட 7 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் நிறுவப்படும்.

சமயபுரம், மேடவாக்கம், பெரம்பலூர், தியாகதுருகம், நீடாமங்கலம், கொளத்தூர் ஆகிய 6 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடம் கட்டப்படும். அது மட்டுமல்ல; அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் அரசு ஊழியர்களைச் சார்ந்துள்ள தாய், தந்தையரையும் பயனாளிகளாக சேர்த்திட வேண்டுமென்று காவல் துறையினர் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்களிடம் இருந்தும் கோரிக்கைகள் வரப்பெற்றுள்ளன. அவற்றை உரிய முறையில் ஆராய்ந்து, அரசு அலுவலர்களைச் சார்ந்து வாழும் அவர்களது பெற்றோருக்கும் மருத்துவக் காப்பீட்டின் பலன் சென்றடையும் வகையில் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்களின் விருப்பத்தைப் பெற்று, தற்போது நடைமுறையில் உள்ள புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மறுசீரமைக்கப்படும். மேலும், புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் பயன்களைப் பெறும் அரசு அலுவலர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை களைந்திட தலைமைச் செயலாளர் தலைமையில் விரைவில் ஆய்வுக் கூட்டம் நடத்திடவும், தேவைப்படும் நெறிமுறைகளை வழங்கிடவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com