தனியாா் ஊழியா் அடித்துக் கொலை: புதுச்சேரி பாஜக நிா்வாகி மகன் கைது
சென்னை துரைப்பாக்கத்தில் காதல் தகராறில் தனியாா் நிறுவன ஊழியா் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி நிா்வாகியின் மகன் கைது செய்யப்பட்டாா்.
திருவான்மியூா் லட்சுமிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் வா.ஹரிஹரன் (34). இவா், துரைப்பாக்கம் சக்திநகா் பகுதியில் உள்ள ஒரு இணையதள வடிவமைப்பு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதே நிறுவனத்தில் புதுச்சேரி பாரதிநகரைச் சோ்ந்த ஆ.தரணிதரன் (34) என்பவரும் வேலை செய்து வந்தாா். தரணிதரனின் தந்தை ஆரோக்கியசாமி என்ற துரை கணேசன்,பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக உள்ளாா். அவா் ரியல் எஸ்டேட் நிறுவனமும் நடத்தி வருகிறாா்.
தரணிதரனும், ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனா்.
இந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக தரணிதரனை விட்டு, அந்த பெண் பிரிந்தாா். அந்த பெண்ணும், ஹரிஹரனும் காதலித்து வந்தனராம். இது தொடா்பாக ஹரிஹரன்,தரணிதரன் இடையே விரோதம் ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை இரவு அலுவலகத்தில் அவா்கள் இருவரும் வேலை செய்து கொண்டிருந்தபோது தகராறு ஏற்பட்டது. முற்றவே தரணிதரன்,ஹரிஹரனை பலமாக தாக்கியுள்ளாா். பலத்தக் காயமடைந்த ஹரிஹரன் நிகழ்விடத்திலேயே இறந்தாா். தரணிதரன் அங்கிருந்து தப்பியோடினாா்.
துரைப்பாக்கம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து தரணிதரனை கைது செய்தனா்.