
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தனது 71வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில், தமிழக பாஜக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருக்கிறது.
அண்மையில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் சார்பில் நாளிதழ்களில் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில் சீனா ராக்கெட் படம் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, ராக்கெட் ஏவுதளத்தைத் தொடங்கி வைத்த நிலையில், விளம்பரங்களில் சீன கொடியுடன் ராக்கெட் இடம்பெற்றிருந்தது குறித்து பாஜக தரப்பிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சீன தேசியக் கொடியுடன் ராக்கெட் இடம்பெற்றிருந்த விளம்பரம் சர்ச்சையான நிலையில், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல் நாட்டு விழா தொடர்பாக வெளியான பத்திரிகை விளம்பரத்தில் சீன கொடியுடன் ராக்கெட் இடம்பெற்றதில் எந்த உள்நோக்கமும் இல்லை என்று மீன்வளம் - மீனவர் நலன், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் நேற்று விளக்கமும் கொடுத்திருந்தார்.
இந்த நிலையில்தான், தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக பாஜகவின் சமூக வலைத்தளப் பக்கத்தில் சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
சீன ராக்கெட் இடம்பெற்றிருந்த விவகாரத்தை மனதில்கொண்டு, தமிழக பாஜக, இவ்வாறு சீன மொழியில் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லியிருப்பது சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டும் பேசப்பட்டும் வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.