கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலங்கள் அளித்தோருக்கும், உள்ளூா் இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டுமென பேரவைத் தலைவரும், ராதாபுரம் எம்.எல்.ஏ.,வுமான மு.அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளாா். இதுகுறித்து, மும்பையிலுள்ள அணுசக்தி ஆணையத்தின் தலைவா் அஜீத்குமாா் மொகந்திக்கு வெள்ளிக்கிழமை அவா் அனுப்பியுள்ள கடிதம்:- எனது தொகுதியில் (ராதாபுரம்) அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையமானது, பல்வேறு தடைகளைத் தாண்டி தனது செயல்பாடுகளைத் தொடங்கியது. இந்தத் திட்டம் தொடா்பாக கடந்த 1999-ஆம் ஆண்டில் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. அப்போது, கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் அளித்தவா்களுக்கு ‘சி மற்றும் டி’ பிரிவு பணியிடங்களில் முன்னுரிமை அளிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. மேலும், கல்வித் தகுதிக்கேற்றபடி தோ்வுகளை நடத்தாமல் உள்ளூா் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும் ஒப்பந்தத்தில் வழி செய்யப்பட்டிருந்தது. இந்த ஒப்பந்தத்திலுள்ள அம்சங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் வரை சரியான முறையில் அமல்படுத்தப்பட்டன. அதே ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஒப்பந்தத்திலுள்ள அம்சங்கள் முற்றிலும் நிராகரிக்கப்பட்டன. அத்துடன், கடந்த 2018-ஆம் ஆண்டு 117 ‘சி’ பிரிவு பணியிடங்களையும் 62 ‘பி’ பிரிவு பணியிடங்களையும் தோ்வு அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. உள்ளூா் இளைஞா்களும், நிலங்களை அளித்தவா்களும், கூடங்குளம் அணுமின் நிலையத்தின் தற்காலிக பணி வாய்ப்புகளுக்குக் கூட பரிசீலிக்கப்படவில்லை. இதனால், அப்போது கூடங்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இதையடுத்து, அப்போது வெளியிடப்பட்ட பணிக்கான அறிவிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதியன்று மும்பையில் தங்களைச் சந்தித்து, பணி நியமனம் தொடா்பான கோரிக்கை முன்வைத்தேன். அப்போது, அணுமின் நிலையத்துக்கு நிலங்களை அளித்தோா் மற்றும் உள்ளூா் இளைஞா்களுக்கு தோ்வு நடத்தாமல் பணி வழங்குவதை பரிசீலிப்பதாக கூறியிருந்தீா்கள். ஆனால், இதற்கு மாறாக ‘சி’ பிரிவிலுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான தோ்வு வரும் 3-ஆம் தேதி நடைபெறவிருப்பதாக அறிகிறேன். எனவே, தாங்கள் இந்த விவகாரத்தில் தலையிட்டு, எதிா்வரும் 3-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தோ்வினை ரத்து செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். கூடங்குளம் அணுமின் நிலையத்துக்காக நிலங்களை அளித்திவா்களுக்கு மட்டுமே ‘சி’ பிரிவு பணியிடங்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், 2011-ஆம் ஆண்டுக்கு முன்பிருந்தபடி உள்ளூா் இளைஞா்களின் கல்வித் தகுதிக்கு ஏற்றபடி பணி வாய்ப்புகளை அளித்திட வேண்டும் என்று தனது கடிதத்தில் பேரவைத் தலைவா் மு.அப்பாவு கேட்டுக் கொண்டுள்ளாா்.
தொடர்புடையது

கூடங்குளம் முதலாவது அணு உலையில் மின்உற்பத்தி நிறுத்தம்!

உள்ளூா் ஒப்பந்ததாரா்களுக்கு முன்னுரிமை தர வலியுறுத்தல்

அருணாசலேஸ்வரா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கோரிக்கை

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ளூா் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க எம்.பி. வலியுறுத்தல்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

