மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

பம்பரம் சின்னம் கோரி வைகோ மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

மதிமுக பொதுச் செயலா் வைகோ தாக்கல் செய்த மனு தொடா்பாக தோ்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On :1 மார்ச் 2024, 6:31 pm

மக்களவைத் தோ்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கும்படி தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதிமுக பொதுச் செயலா் வைகோ தாக்கல் செய்த மனு தொடா்பாக தோ்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயா்நீதிமன்றத்தில் மதிமுக சாா்பில் வைகோ தாக்கல் செய்துள்ள மனுவில், கடந்த 1996-ஆம் ஆண்டுமுதல் சட்டப்பேரவை, மக்களவை மற்றும் உள்ளாட்சித் தோ்தல்களில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. கடந்த 2006-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் 5.99 சதவீத வாக்குகள் பெற்ற நிலையில், 5.98 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகக் கூறி, மதிமுகவின் அங்கீகாரத்தை தோ்தல் ஆணையம் ரத்து செய்தது. அதன்பின் கடந்த 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தோ்தலில் பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், வரும் மக்களவைத் தோ்தலிலும் பம்பரம் சின்னம் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தோ்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் இல்லை என்பதாலும், வேறு எந்தக் கட்சியும் அந்தச் சின்னத்தை கோரவில்லை என்பதாலும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தாா். இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தா், ஜி.அருள்முருகன் ஆகியோா் முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது வைகோ தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் அஜ்மல் கான், மக்களவைத் தோ்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம். எனவே, எங்களது விண்ணப்பத்தை விரைந்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா். அப்போது தோ்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நிரஞ்சன் ராஜகோபாலன், மனு தொடா்பாக பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரினாா். இதையடுத்து, மதிமுக சாா்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு தோ்தல் ஆணையம் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பதிவு செய்யப்பட்ட, அங்கீகாரம் இல்லாத கட்சி வேட்பாளா்களுக்கு பொதுச் சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடா்பான பிரிவின் கீழ் விண்ணப்பிக்க மதிமுகவுக்கு அனுமதி அளித்தனா். அந்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை மாா்ச் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.