
ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள பெண் யானையை வனத்துறையினர் தங்களது பிள்ளை போல கண்ணும் கருத்துமாக கவனித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் வனச்சரகத்துக்கு உள்பட்ட பவானிசாகர் - பண்ணாரி சாலையில் உள்ள பள்ளத்தில் பெண் யானை ஒன்று எழுந்திரிக்க முடியாமல் படுத்திருப்பது குறித்து வனத்துஐற ஊழியர்கள் உயரதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.
உடனடியாக, யானைக்கு சிகிச்சையளிக்க சத்தியமங்கலம் புலிகள் காப்பக உதவி கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து வந்து யானையை பரிசோதித்தனர். பிறந்த 2 மாதங்களே ஆன யானை குட்டி ஒன்று, பெண் யானையை சுற்றி சுற்றி வந்ததால், சிகிச்சையளிக்க முடியாமல் போனது. இதனால், குட்டி யானை அருகில் கொண்டு செல்லப்பட்டு அது கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் வைக்கப்பட்டது.
பிறகுதான், பெண் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. வனத்துறையினருக்கு இது மிகவும் கடினமான காலம் என்று சொல்லும் அளவுக்கு அவர்கள் பெண் யானையின் உடல்நிலையை சீராக்க கடுமையாகப் போராடி வருகிறார்கள்.
சத்யமங்கலம் புலிகள் காப்பகத்தில், உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பெண் யானை இயல்பாக எழுந்து நிற்க முடியாத நிலையில், உணவருந்தவும் முடியாமல் உள்ளது.
இந்த நிலையில், அதன் உடல்நிலையை சீராக வைக்க அவ்வப்போது குளிக்க வைக்கவும், உணவு சாப்பிட முடியாததால் அதற்கு குளூக்கோஸ் பாட்டில்கள் மூலம் நீர்ச்சத்து குறையாமல் காக்கவும் வனத்துறையினர் போராடி வருகிறார்கள்.
தொடர்ந்து வனத்துறையின் குழுவினர் யானையின் உடல்நிலையை கண்காணித்தபடி உள்ளனர்.
இந்த யானையின் இரண்டு மாத பெண் யானைக் குட்டி தற்போது கால்நடை மருத்துவர்களின் பராமரிப்பில் உள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டிருக்கும் பெண் யானையை வனத்துறையினர் பராமரிக்கும் விடியோ பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது.
ஏற்கனவே தாயிடமிருந்து பிரிந்த குட்டியானையை பத்திரமாக மீட்டு, தாயுடன் சேர்க்க வனத்துறையினர் எடுத்த முயற்சிகள் நன்கு அறியப்படும் நிலையில் தற்போது பெண் யானையை கவனித்துக் கொள்ளும் வனத்துறையினரின் சேவையை தமிழக மக்கள் நெகிழ்ச்சியோடு பாராட்டி வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.