யானைக் கூட்டத்தில் தாயை இழந்த குட்டி யானை! நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கும் விடியோ

யானைக் கூட்டத்தில் தாயை இழந்த குட்டி யானை தொடர்பான நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கும் விடியோ வெளியாகியிருக்கிறது.
யானைக் கூட்டத்தில் தாயை இழந்த குட்டி யானை! நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கும் விடியோ
Published on
Updated on
3 min read

சத்தியமங்கலம்: பண்ணாரி வனப் பகுதியில் 3 நாள்களாக உயிருக்குப் போராடி வந்த தாய் யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில், அதன் குட்டி யானை, யானைக் கூட்டத்தோடு வனத்துறையின் தீவிர முயற்சி காரணமாக வெற்றிகரமாக சேர்க்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமை மாலை தாய் யானை மரணமடைந்த நிலையில், உடனடியாக குட்டி யானையின் மறுவாழ்வுக்கு என்ன செய்வது என்று வனத்துறையினர் ஆராய்ந்தனர். உடனடியாக அப்பகுதியில் உள்ள யானைக்கூட்டத்தோடு அதனை சேர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, இரவு நேரத்தில் இந்தமுயற்சியை எடுத்துள்ளனர்.

யானைக் கூட்டத்தில் தாயை இழந்த குட்டி யானை! நெகிழ்ச்சி சம்பவத்தை விவரிக்கும் விடியோ
ஒட்டுமொத்த இந்தியா்களும் மோசமானவா்கள் அல்ல: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான ஸ்பெயின் பயணி

இதற்காக வனத்துறையினர் எடுத்த முயற்சி பலனளித்துள்ளது. யானைக் கூட்டம் ஒன்று கடந்து செல்லும் வழியில் இந்த குட்டி யானையை நிறுத்தி வைத்திருந்தனர் வனத்துறையினர். குட்டி யானையைப் பார்த்ததும், அந்த யானைக் கூட்டத்திலிருந்து ஓடி வந்த ஒரு பெண் யானையை, குட்டி யானையை அரவணைத்துக் கொண்டு தனது கூட்டத்துடன் சென்றது. இதனால், வனத்துறையினர் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த விடியோவை சத்ய பிரதா சாஹு பகிர்ந்துள்ளார். அதனுடன், தாய் யானையின் நீண்ட போராட்டத்தையும் அவர் உருக்கமாக விவரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பண்ணாரி வனப் பகுதியில் அதிக அளவில் யானைகள் உள்ளன. தற்போது, கோடை வெயில் காரணமாக யானைகள் உணவு, தண்ணீா் தேடி வனத்தை விட்டு வெளியே வருவது வழக்கம். இந்நிலையில், பண்ணாரி அம்மன் கோயிலில் இருந்து பவானிசாகா் செல்லும் சாலையில் குட்டியுடன் ஞாயிற்றுக்கிழமை வந்த தாய் யானை மயங்கி விழுந்தது. மயங்கிய நிலையில் கிடந்த தாய் யானை அருகே குட்டி யானை பரிதாபமாக அங்கும் இங்கும் உலவுவதைக் கண்ட வாகன ஓட்டிகள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா். சம்பவ இடத்துக்குச் சென்ற சத்தியமங்கலம் புலிகள் காப்பக இணை இயக்குநா் சுதாகா், வனச் சரக அலுவலா் கே.ஆா்.பழனிசாமி ஆகியோா் யானையின் உடலை ஆய்வு செய்தனா். யானை உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அதற்கு வனக் கால்நடை மருத்துவா் சதாசிவம் தலைமையிலான மருத்துவக் குழுவினா் 40 வயதுள்ள தாய் யானைக்கு அதே இடத்தில் குளுக்கோஸ் செலுத்தி சிகிச்சை அளித்தனா். மேலும், பொக்லைன் இயந்திரம் மூலம் யானையை பெல்ட்டில் கட்டி தூக்கி நிறுத்தும் முயற்சி தோல்வியில் முடிந்தது. 3 நாள்களாக தாய் யானைக்கு குளுக்கோஸ், பசுந்தழைகள் தீவனமாக அளித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், யானை செவ்வாய்க்கிழமை உயிரிழந்ததாக வனத் துறையினா் தெரிவித்தனா். பிறந்து 2 மாதங்களே ஆன குட்டி யானையைத் தனியாகப் பிரித்து பராமரித்து வந்த வனத் துறையினா், பண்ணாரி வனத்தில் பிற யானைக் கூட்டத்துடன் குட்டி யானையை திங்கள்கிழமை சோ்த்து விட்டனர். மேலும் குட்டி யானையின் நிலை குறித்து ட்ரோன் மூலம் கண்காணித்து வருகிறார்கள்.

இது குறித்து சத்யபிரதா சாஹு பதிவிட்டிருப்பதாவது,

இது ஒரு மிக நீண்ட செய்தி என்ற எச்சரிக்கை வாசகத்தோடு பதிவு தொடங்குகிறது.

'எங்கே ஒரு விருப்பம் இருக்கிறதோ, அங்கே ஒரு வழி பிறக்கிறது' என்பதை நீங்கள் நம்பினால் இதனைப் படிக்க வேண்டியது அவசியம். இதுவும் காட்டு வாழ்க்கையின் போராட்டங்கள் மற்றும் சோகத்தின் ஊடாகக் கண்ட வெற்றியின் உண்மைக் கதை. பண்ணாரி அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மார்ச் 3ஆம் தேதி மாலை, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பெண் யானை, சற்று வளர்ந்த தனது ஆண் குட்டி யானை மற்றும் மிகவும் இளம் குட்டி பெண் யானை உள்பட இரண்டு குட்டிகளுடன் மயங்கிக் கிடந்தது தமிழக வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது.

இதைப் பற்றி தகவல் தெரிந்தவுடன் மருத்துவ நிபுணர்கள், கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று யானையை காப்பாற்றும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. உடல்நிலை சரியில்லாமல் இருந்த தாய் நகர முடியாத அளவுக்கு பலவீனமாக இருப்பதைக் கண்டறிந்த மருத்துவர்கள், இதனால்தான் அது தனது குடும்பமாக இருந்த யானைக் கூட்டத்திலிருந்து பிரிந்ததையும் கண்டறிந்தனர்.

தாய்க்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு எழுந்திரிக்க முடியாமல் போனதால், அதனுடைய இரண்டு குழந்தைகளும் அதிர்ச்சியடைந்து பீதியில் கட்டுப்பாடில்லாமல் ஓட ஆரம்பித்தன.

இதனால், வனத்துறையின் ஒரு குழு, உடனடியாக இளம்வயதுடைய ஆண் குட்டி யானையை மீண்டும் யானைக் கூட்டத்திற்குள் சேர்த்துவிட பல்வேறு முயற்சிகளை எடுத்து, அதனுடன் சேர்த்தது.

பிறகு, நோய்வாய்ப்பட்ட பெண் மற்றும் குட்டி யானைக்கு விரைவாக சிகிச்சை அளித்தது. பொதுவாக குட்டிகளை மீட்கும் சூழ்நிலைகளைக் கையாள்வதற்காக உருவாக்கப்பட்ட வனத்துறையின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குட்டி யானைக்கு உடலில் நீர்ச்சத்து இருப்பதை உறுதி செய்து, அதிக நபர்கள் அதனைக் கையாளாமல், ஒரு சிலர் மட்டும் குட்டி யானையுடன் இருந்து, அது மன அழுத்தமில்லாத சூழலில், மிகவும் பாதுகாப்பாக இருப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.

இதற்கிடையே, தாய் யானை உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை என்ற முடிவுக்கு கால்நடை மருத்துவக் குழுவினர் வந்ததையடுத்து, மார்ச் 4ம் தேதி காலை முதல் கன்றுக்குட்டியை அதன் உடன்பிறந்த யானையுடன் இணைக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன.

இதனை விடுத்து, குட்டியானையை ஒரு முகாமில் வைத்து பராமரிக்க முடியும் என்றாலும், இந்த எளிய தேர்வை எடுக்காமல், அந்த குட்டியானைக்கு ஒரு சிறந்த மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்வதில் வனத்துறையினர் உறுதியாக இருந்தனர்.

இதற்காக, ஆனைமலை மற்றும் முதுமலையில் இருந்து, அனுபவம் வாய்ந்த முன்னணி பணியாளர்கள், கால்நடை மருத்துவர்கள் அடங்கிய குழுக்களை நாங்கள் விரைவாக ஏற்பாடு செய்தோம். இரவு 8 மணியளவில் ட்ரோன்கள் மற்றும் நைட் விஷன் கேமராக்களின் உதவியுடன் அந்தக் குட்டியானைக்கு சொந்தமான யானைக் கூட்டத்தை அடையாளம் கண்டு, யானைக் குட்டி பாதுகாப்பாக ஒரு வனத்துறை வாகனத்தில் கொண்டு வரப்பட்டு யானைக் கூட்டம் செல்லும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அது மட்டுமல்லாமல், அந்த யானைக் கூட்டத்தில், ஒரு சிறிய யானைக் குட்டிக்கு பாலூட்டி பராமரிக்கும் திறன் பெற்ற பெண் யானைகள் இருக்கின்றனவா என்பதையும் வனத்துறையினர் உறுதி செய்துகொண்டனர். பிறகே, அந்த யானைக் கூட்டத்தின் கண்ணில்படும்படி குட்டியானை நிறுத்தப்பட்டது.

எதிர்பார்த்தது போலவே, அந்தப் கூட்டத்தில் இருந்த பெண் யானையும் மற்ற கூட்டமும் குட்டி யானையை தங்கள் சிறகுகளின் கீழ் அன்புடன் அழைத்துச் சென்றன. இதனைப் பார்த்த வனத்துறையினர் நிம்மதியடைந்தனர்.

அதோடு தங்கள் பணி முடிந்துவிடவில்லை என்பதை அறிந்து, மீண்டும் யானைக் கூட்டத்தின் பயணத்தைக் கண்காணித்து, 5ம் தேதி காலை 9:30 மணியளவில் யானைக் கூட்டத்துடன் சாலையைக் கடக்கும் குட்டி யானையின் அற்புதமான காட்சியை தாங்கள் செய்த மகத்தான பணிக்குக் கிடைத்த பாராட்டாகவும் பரிசாகவும் பெற்றனர்.

தமிழ்நாடு வனத்துறையின் பல வெற்றிகரமான குட்டிகளை இடமாற்றம் செய்யும் முயற்சிகளில் இது அண்மையில் நடந்தது. அது மட்டுமல்லாமல் சத்தியமங்கலம் நிலப்பரப்பில் இதுபோன்ற நிகழ்வு முதல் முயற்சியாகும். காட்டு யானைகள் போலவே, நிலப்பரப்பில் உள்ள யானைகளும் பொதுவான சமூக நடத்தை மற்றும் ஆழமான பிணைப்பைப்பகிர்ந்து கொள்கின்றன என்று நம்பமுடியாத உண்மையை இது வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

இந்த கடினமான முன்முயற்சி, தமிழக வனத்துறையின் வன வீரர்கள் மற்றும் அதிகாரிகளின் கடின உழைப்புக்கு ஒரு சான்றாக அமைந்துள்ளது.

இந்த பணியில் ஈடுபட்ட ஒட்டுமொத்த குழுவிற்கும் பாராட்டுகள் என்று பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளின் பெயர்களும் பதிவிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த இரண்டு நாள்களாக, முழுவதும் யானைக் குட்டியுடன் இருந்தவர்கள் ராம்குமார், லலித் அவர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. குட்டியானையை, யானைக் கூட்டத்துடன் சேர்க்க நடந்த முயற்சியில் ஈடுபட்ட பாகன் கிருமாறன் மற்றும் அவரது குழுவினரும் முக்கிய பங்காற்றினர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com