தருமபுரி நெடுஞ்சாலையை இணைக்கும் புதிய ரயில்வே மேம்பாலம்: முதல்வர்

பாரதிபுரத்தில் 36 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (11.03.2024) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டங்களில் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கும் விழா, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கக்கூடிய விழாவில் ஆற்றிய உரையில் தெரிவித்ததாவது:

"வெண்ணாம்பட்டி சாலையையும், தருமபுரி மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கின்ற வகையில் பாரதிபுரத்தில் 36 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.

வாச்சாத்தி முதல் கலசப்பாடி வரையிலான மலைப்பகுதிகளில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சாலை அமைக்கப்படும். தருமபுரி மாவட்டத்தில் ஐந்து சமுதாய நலக்கூடங்கள் நான்கு கோடியே நான்கு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

வாச்சாத்தி கொடுமையை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள்! எந்த ஆட்சியில் நடந்தது என்றும் மறந்திருக்க மாட்டீர்கள்! ஆனால், பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில்தான் விடியல் பிறந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட 18 நபர்களுக்கு தலா 10 லட்ச ரூபாய் என்று மொத்தமாக 1 கோடியே 80 லட்சம் ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட்டிருக்கிறது. மற்ற வேலைவாய்ப்புகளும் விரைவில் வழங்கப்படும்.

இப்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கான அறிவிப்புகளை வெளியிடுகிறேன்…

தொழிலாளர்கள் நிறைந்த ஓசூர் மற்றும் அதை சுற்றி இருக்கின்ற பகுதிகளில், அவர்களுடைய நலனுக்காக, நடமாடும் மருத்துவப் பிரிவு ஏற்படுத்தப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்ட மைய நூலகத்துக்கு 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் அமைக்கப்படும்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
தொகுதிப் பங்கீடு: அண்ணாமலை - சரத்குமார் சந்திப்பு

தளி ஊராட்சி ஒன்றியத்தில் 10 கிலோ மீட்டருக்கு சாலை உட்பட, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 75 சாலைகள் சுமார் 78 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 92 சாலைகள், 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 28 சிறுபாலங்கள் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்.

தேன்கனிக்கோட்டை வட்டத்தில் யானை தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்ற 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு 3 கோடியே 50 லட்ச ரூபாய் செலவில் எஃகு கம்பி கயிறு வேலி அமைக்கப்படும்.

கெலமங்கலம் அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் 100 மாணவர்கள் தங்கும் வகையில், ‘புதிய பிற்படுத்தப்பட்டோர் நல பல்தொழில்நுட்ப கல்லூரி மாணவர் விடுதி’ தொடங்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்துல 3 சமுதாய நலக்கூடங்கள் 2 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

கிராமப்புற பகுதிகளில், 5 துணை சுகாதார மையக் கட்டடங்களும், நகர்ப்புறத்தில், 2 துணை சுகாதார மையக் கட்டடங்களும் 3 கோடியே 15 லட்ச ரூபாய் செலவில் கட்டப்படும்.

உனிச்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், பழங்குடியினருக்கான புதிய பிறப்பு காத்திருப்பு கூடம் அமைக்கப்படும்.

கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் சத்துணவு மற்றும் மறுவாழ்வு மையம் 25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஏற்படுத்தப்படும்.

ஊராட்சி ஒன்றியங்களில், 30 பொது விநியோக அங்காடிகள் 28 அங்கன்வாடி மையங்கள் 9 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

வன விலங்குகளுக்கு தண்ணீர் கிடைக்க ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் நீர்நிலைகள் தூர்வாரும் திட்டம் தொடங்கப்படும்.

அடுத்து, சேலம் மாவட்டத்துக்கான அறிவிப்புக்களை வெளியிடுகிறேன்.

210 கிலோ மீட்டர் நீளத்தில் 79 கிராமச் சாலைகள், 21 உயர்மட்டப் பாலங்கள், 127 கிலோ மீட்டருக்கு 211 ஓரடுக்கு கப்பி சாலைகள், 76 கிலோ மீட்டர் நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலை, 47 கிலோ மீட்டர் நீளத்துக்கு பேவர் பிளாக் அமைக்கும் பணிகள் ஆகியவை, 164 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

செட்டிசாவடி வளாகத்தில் இருக்கின்ற குப்பைமேடு ‘பயோ மைனிங்’ அப்புறப்படுத்தும் பணிகள், 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

நங்கவள்ளி குடிநீர் நீரேற்ற நிலையம் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும். சேலம் மாவட்டத்தில் 14 சமுதாய நலக்கூடங்கள் 11 கோடியே 46 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

சேலம் மாநகராட்சியில், தனி குடிநீர் திட்டத்தின்கீழ் உள்ள மோட்டார் பம்புகள் மற்றும் V.F.D–களை மறு சீரமைக்கும் பணி, 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

தெரு நாய்களால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுக்க, ’விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையம்’ கட்டும் பணி 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்." என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com