தாம்பரம், காஞ்சி உள்பட 21 உள்ளாட்சி அமைப்புகளில் கடும் தண்ணீர் பஞ்சம்

தாம்பரம், காஞ்சி உள்பட 21 உள்ளாட்சி அமைப்புகளில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதாக எச்சரிக்கை
தாம்பரம், காஞ்சி உள்பட 21 உள்ளாட்சி அமைப்புகளில் கடும் தண்ணீர் பஞ்சம்

சென்னை: தமிழகத்தில் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 21 உள்ளாட்சி அமைப்புகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகரித்திருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

உலக வங்கியின் அண்மைய தொழில்நுட்ப அறிக்கையின்படி, தமிழ்நாடு காலநிலை மாற்றியமைக்கும் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழக அரசின் முன் முயற்சியால், உலக வங்கியின் 300 மில்லியன் டாலர் நிதியுதவியுடன் உருவாக்கப்பட்ட 21 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் அதிக முதல் தீவிர தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளில், தண்ணீர் பற்றாக்குறை வரைபடத்தின் அடிப்படையில் உலக வங்கி, நடத்திய ஆய்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

தமிழக நகர்ப்புறங்களில் 48 சதவீதத்துக்கும் அதிகமானோர் தண்ணீர் பற்றாக்குறைு மற்றும் பாதுகாப்பற்ற சுகாதாரம் தொடர்பான பிரச்சினைகளை முன்பே அனுபவித்துள்ளனர். அந்த பட்டியலில் காஞ்சிபுரம், புதுக்கோட்டை, தாம்பரம், சேலம், தருமபுரி, நாகர்கோவில், திருவாரூர், காரைக்குடி, திண்டுக்கல், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, திருச்சி, ஆவடி, வேலூர், தேனி, ஈரோடு, நாமக்கல், ராஜபாளையம், கடலூர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய 21 உள்ளாட்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

2015 ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்தநிலையில், தமிழகத்தில் வரலாறு காணாத வெள்ளத்திற்கு வழிவகுத்தது, அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு கடந்த 140 ஆண்டுகளில் மாநிலம் கண்டிராத மிக மோசமான வறட்சியை ஏற்படுத்தியது. வெள்ளத்தின் போது, நீர்நிலைகள் கடுமையாக சேதமடைவதே இதற்குக் காரணமாக உள்ளன.

2019 கோடையில், நான்கு பெரிய நீர்த்தேக்கங்கள் முழுமையாக வறண்டு போனதால், சென்னையில் நீர் நிலைகளில் தண்ணீரே இல்லாத 'பூஜ்ஜிய நாள்' என்ற அளவுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. நீர்வள அமைச்சகத்தால் அடையாளம் காணப்பட்ட 1,943 ஏரிகளில், கணிசமான எண்ணிக்கையானது நகராட்சி கழிவுகளை கொட்டுவதற்கான இடமாக மாற்றப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.

இப்பகுதிகளில் வாழ்பவர்களில் பெரும்பாலானோர், ஒரு நாளைக்கு ஒரு மணிநேரம் முதல் மூன்று மணிநேரம் வரை மட்டுமே தண்ணீரைப் பெறுகிறார்கள், இந்த கணக்கீடு நாள்தோறும் முதல் ஐந்து நாள்களுக்கு ஒரு முறை மாறுபடும். மொத்த நீர் வழங்கல் அளவுகளில் ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 65 லிட்டர்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. தேசிய வழிகாட்டுதல்படி இந்த அளவானது 135 லிட்டராக உள்ளது.

இதனால், பொதுமக்கள் பெரும்பாலும் முறைசாரா நீர் விநியோகத்தை (தண்ணீர் லாரிகள், தனியார் விற்பனையாளர்கள் அல்லது நிலத்தடி நீர் போன்றவை) தங்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்து கொள்ளப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

ஆனால், நிலைமை இன்னும் மோசமாகும்போது இந்த ஆதாரங்கள் மூலம் தண்ணீர் கிடைக்காது, அல்லது சுகாதாரமற்ற தண்ணீராக இருக்கும்.

எனவே, மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் இன்னும் சுகாதாரமற்ற தண்ணீரையே அடிப்படைத் தேவைகளுக்கு நம்பியுள்ளனர் என்பது தெளிவாகிறது. பெரும்பாலும் மாசடைந்த தண்ணீரால், பெண்களும் குழந்தைகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றனர், இது நோய்களை ஏற்படுத்தி, சுகாதாரத் தேவையை அதிகப்படுத்தி, குழந்தைகளைத் தாக்கும் போது அவர்களது கல்வியும் பாதிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com