
சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடியில், தனியார் வங்கி ஊழியர்கள், கூலித்தொழிலாளி ஒருவர் வாங்கிய கடன் தவணையை கட்டிவிட்டு மனைவியை கூட்டிசெல்லுங்கள் என்று கூறி மனைவியை வங்கிக்கு கூட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தனியார் வங்கியில் நேற்று இரவு 07.30 மணி வரை மனைவியை தங்க வைத்து கணவரிடம் பணத்தை வசூல் செய்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே துக்கியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (27). கொத்தனார் வேலை செய்யும் கட்டடதொழிலாளி. இவர் கௌரிசங்கரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு குடும்ப கஷ்டம் காரணமாக வாழப்பாடியில் உள்ள தனியார் நிதி வங்கியில் ரூபாய் 35 ஆயிரம் பணம் கடன் பெற்று இருந்தார்.
வாரம் 770 ரூபாய் வீதம் 52 வார தவணைகளில் பணத்தை திருப்பி செலுத்தும் வண்ணம் கடன் பெற்று இருந்தாக கூறப்படுகிறது. இன்னும் 10 வார தவணை பாக்கி உள்ளதாக தெரிகிறது.
நேற்று சுபா என்கிற தனியார் வங்கி பெண் ஊழியர், பிரசாந்த்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது போனை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் நேரில் தவணை வசூல் செய்ய சென்ற தனியார் வங்கி பெண் ஊழியர் சுபா பிரசாந்த் வீட்டில் மதியம் முதல் காத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. வீட்டில் பிரசாந்த் இல்லாதால் வீட்டில் இருந்த கௌரி சங்கரை தன்னுடன் வருமாறும், தவணை தொகை செலுத்தி விட்டு உனது கணவர் அழைத்து செல்லட்டும் என்று கூறி சுபா கௌரிசங்கரியை அழைத்துக்கொண்டு வங்கி கிளைக்கு வந்துள்ளார்.
இது குறித்து கௌரி சங்கரி செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தவணை தொகை பணத்தை கட்டிவிட்டு சீக்கிரம் என்னை அழைத்து செல்லுங்கள் என கூறியதால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த் வாழப்பாடி காவல்நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த்திடம் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரின் பேரில் வாழப்பாடி காவல்நிலைய துணை காவல் கண்காணிப்பாளர் ஆனந்த் உத்தரவின் பேரில் நேரில் சென்ற வாழப்பாடி காவல்துறையினர் இரவு 8 மணி வரை வங்கி செயல்பட உங்களுக்கு அனுமதி அரசு கொடுத்துள்ளதா? என வங்கி மேலாளரிடம் கேட்டபோது, மாத கடைசி என்பதால் இரவு அலுவலகம் மூட நேரமாகும் என தெரிவித்தார்.
மேலும் கடன் தவணையை கட்டிவிட்டு மனைவியை கூட்டிசெல்லுங்கள் என்று கூறியது எனக்கு தெரியாது என்று தெரிவித்தார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் பிரசாந்த் போலீசார் முன்னிலையில் 770 ரூபாய் பணத்தை செலுத்தி விட்டு மனைவி கௌரிசங்கரியை மீட்டுச் சென்றார். இரவு நேரம் என்பதால் இரண்டு தரப்பினரையும் விசாரிக்க காலையில் நேரில் வரச்சொல்லி விட்டு காவல்துறையினர் அங்கிருத்து சென்றனர்.
மாலை 6 மணிக்கு மேல் வாடிக்கையாளர்களை பணம் கேட்டு தொந்தரவு செய்யக்கூடாது என்ற ரிசர்வ் வங்கி ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இரவு 07.30 மணிவரை பெண்ணை வங்கியில் அமரவைத்து கணவரிடம் பணத்தை வசூல் செய்த தனியார் வங்கி மீது ரிசர்வ் வங்கி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.