
பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காவல் துறை அதிகாரிகள், பெண் காவலா்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக யூ-டியூபா் சவுக்கு சங்கா், கடந்த 4-ஆம் தேதி தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியில் தங்கியிருந்தபோது கோயம்புத்தூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். அப்போது அவா் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டி போலீஸாா் தனியாக ஒரு வழக்கை சவுக்கு சங்கா் மீது பதிவு செய்தனா். மேலும் ஒரு பெண் பத்திரிகையாளரை அவதூறாகப் பேசியதாக ஒரு வழக்கையும், தமிழா் முன்னேற்றப் படை தலைவி வீரலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு வழக்கையும் சென்னை பெருநகர காவல் துறையின் சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் பதிவு செய்தனா்.
சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் ஆவணங்களை போலியாகத் தயாரித்து கிளாம்பாக்கம் பேருந்து முனையம் குறித்து அவதூறு பரப்பியதாக அளிக்கப்பட்ட புகாரில் சவுக்கு சங்கா் மீது மேலும் ஒரு வழக்கை சென்னை சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை பதியப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கர் மீது சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டுள்ளது. அதன் கீழ், அவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சங்கர் மீது குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அவரை சிறையிலடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, கோவை சிறையிலுள்ள சங்கருக்கு சென்னை பெருநகர காவல், மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவு காவல் ஆய்வாளர் மூலம் இன்று (மே. 12) சார்வு செய்யப்பட்டுள்ளது.
சங்கர் மீது பதியப்பட்டுள்ள 7 வழக்குகளில், 3 வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும், 2 வழக்குகளில் குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 2 வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவதூறு வழக்கில் யூ-டியூபா் சவுக்கு சங்கரை நோ்காணல் செய்து தனது யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி திருச்சியிலும் பெண் போலீஸாா் புகார் அளித்திருந்த நிலையில், சவுக்கு சங்கரைத் தொடா்ந்து யூ-டியூபா் பெலிக்ஸ் ஜெரால்டும் சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.