நீடாமங்கலம்: கூலிப்படையினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை!

நீடாமங்கலம் பகுதியில் கூலிப்படையினரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு வணிகர் சங்க பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
நீடாமங்கலம்: கூலிப்படையினர் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த  அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை!
Published on
Updated on
2 min read

நீடாமங்கலம்: நீடாமங்கலம் பகுதியில் கூலிப்படையினரின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த அரசுக்கு வணிகர் சங்க பொதுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

நீடாமங்கலம் வணிகர் சங்கம் சார்பில் வணிகர் நாள், பொதுக்குழுக்கூட்டம், மூத்த வணிகர்களுக்கு வணிக மாமணி விருது வழங்கும் முப்பெரும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இவ்விழாவிற்கு தலைவர் நீலன். அசோகன் தலைமை வகித்தார். முன்னாள் தலைவர்கள் என். இளங்கோவன், பி.கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சங்க மூத்த வணிகர்களுக்கு வணிக மாமணி விருதை வழங்கி மயிலாடுதுறை தொழிலதிபர் ஏ. தமிழ்ச்செல்வன், திருவாரூர் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் தலைவர் ஜெ. கனகராஜ், லயன் தெ. சுதர்சன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

நீடாமங்கலத்தில் மக்கள் தொகைப்பெருக்கத்தினால் கழிவுநீர் , சாக்கடை நீர் மற்றும் மழைக்காலங்களில் தேங்கும் மழைநீர் போன்றவை வடிவதற்கு போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தி நிலையங்களாகவும், தொற்றுநோய் ஏற்படுத்தும் ஆதாரங்களாகவும் இருந்து வருகிறது.

இதைப்போக்க நீடாமங்கலத்தில் பாதாள சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். ஏற்கனவே இத்திட்டம் நீடாமங்கலத்தில் செயல்படுத்த அறிவிக்கப்பட்டு பின்னர் வேறு ஊருக்கு மாற்றப்பட்டது. மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும்.

நீடாமங்கலம்: கூலிப்படையினர் நடமாட்டத்தை  கட்டுப்படுத்த  அரசுக்கு வணிகர்கள் கோரிக்கை!
தண்டவாளத்தில் படுத்திருந்த போது ரயில் மோதி ஒருவர் பலி, 2 பேர் படுகாயம்!

தமிழக அரசு வணிகர் நல வாரியத்தை சீரமைத்து வணிகர்களுக்கு பயன்படுகிற வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

தற்போதுள்ள வணிகர் நல வாரியத்தால் வணிகர்களுக்கு எந்தவித பயனும் இல்லை. எனவே தமிழக முதல்வர் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுத்து வணிக நல வாரியம் வணிகர்களுக்கு முழுமையாக பயன்பட ஆவனம் செய்ய வேண்டும்.

வணிகர்களுக்கென பிரத்யோகமாக ஆண்டுக்கொருமுறை மாவட்ட ஆட்சியர் தலைமையில் வணிகர்கள் குறை தீர் கூட்டம் நடத்தப்பட்டு வணிகர்களின் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும்.

பொதுமக்கள், வணிகர்கள் பயன்படும் வகையில் மின்சாரத்தை கணக்கிட மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை செயல்படுத்த வேண்டும்.

நீடாமங்கலத்தில் பொதுமக்கள், வணிகர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் பணிகளை தொடங்கியுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு இப்பொதுக்குழு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

நீடாமங்கலத்தின் வணிகம் மிகவும் பழமையானது. தேங்காய் மண்டி, நெல் மண்டி,வெங்காய மண்டி ,உரமண்டி என பலவகை மண்டிகள் அமைத்து ரயில் வேகன்களில் ஏற்றி வியாபாரம் செய்த வியாபாரிகள் நிறைந்த ஊர்.

தற்போது வணிகர்கள் வியாபாரம் செய்ய முடியாதபடி விரும்பத்தகாத சட்டம் ஒழுங்கு பிரச்னைகளால் வணிகர்கள் அச்சத்தோடு வியாபாரம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. கூலிப்படையினர் நடமாட்டம், போதைப்பொருள்களின் புழக்கம் அதிகரித்துள்ளதால் வணிகர்கள் போதிய வியாபாரம் இன்றி மனஉளைச்சலில் உள்ளார்கள்.

இதைப்போக்க மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல்துறையும் உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது. இதற்காக எடுக்கும் நடவடிக்கைக்கும் நீடாமங்கலம் வணிகர் சங்கம் முழு ஒத்துழைப்பை அளிக்கும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவ்விழாவில் எம்.அப்துல்காதர், கே.ரெங்கநாதன், ஆர். அழகர்சாமி, ஆர்.சந்தானராமன், ஜி.ராஜேந்திரன் ஆகியோருக்கு மூத்த வணிகமாமணி விருது வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முன்னதாக விழா குழுத் தலைவர் தங்ககோபி வரவேற்றார். நிறைவில் பால.சரவணன் நன்றி தெரிவித்தார்.

படம்- நீடாமங்கலத்தில் நடைபெற்ற வணிகர் சங்க முப்பெரும் விழா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com