
காரைக்கால்: திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ தேரோட்டம் நடைபெற்று வருகிறது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாற்றில் பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஸ்ரீ சனீஸ்வரபகவான் தனி சந்நிதியில் அருள்பாலிக்கிறார். சப்தவிடங்க தலங்களுள் ஒன்றான இங்கு ஸ்ரீ செண்பக தியாகராஜர் உன்மத்த நடனம் சிறப்புக்குரியது.
சனிக்கிழமைகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ஸ்ரீ செண்பக தியாராஜசுவாமி வசந்த மண்டபம் எழுந்தருளல், பின்னர் யதாஸ்தானம் எழுந்தருளும் நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
இதைத் தொடர்ந்து பூத வாகனம், யானை வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரவு மின் அலங்கார சப்பரத்தில் (தெருவடைச்சான்) தங்க ரிஷப வாகனத்தில் ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் அதனதன் வாகனத்தில் வீற்றிருந்தவாறு வீதியுலா புறப்பாடு நடைபெற்றது.
தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. முன்னதாக தேருக்கு ஸ்ரீ செண்பக தியாகராஜசுவாமி சனிக்கிழமை இரவு இழுந்தருளினார். ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் தேருக்கு செய்யப்பட்டு, புதுவை அமைச்சர் ஏ.கே. சாய் ஜெ. சரவணன் குமார், சட்டப்பேரவை உறுப்பினப் பி.ஆர். சிவா உள்ளிட்ட திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வர் ஆகியோர் வீற்றிருக்கக்கூடிய 5 தேர்களை பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் இழுத்துச் செல்கின்றனர். தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.
நான்கு மாட வீதிகளில் வலம் வந்து மாலை 5 மணியளவில் தேர் நிலையை அடைகின்றன. இந்நிகழ்வில் புதுவை துணை நிலை ஆளுநர் (பொ) சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கவுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.