
நாட்டிலேயே தமிழக கல்வித்துறை தலைசிறந்து விளங்குவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் தொடக்கப் பள்ளிகளில் ரூ.600 கோடியில் காலை உணவுத் திட்டம், ரூ.436 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள், ரூ.590 கோடியில் இல்லம்தேடி கல்வித் திட்டம், ரூ.101 கோடியில் ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள், ரூ.1887 கோடியில் அனைத்து வகைப் பள்ளிகளிலும் கட்டமைப்பு வசதிகள் என கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் தலை சிறந்து விளங்குகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.
கல்வி வளர்ச்சியில் தொடக்கக் கல்வி மிகமிக முக்கியமானது. அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது; அடித்தளம் வலுவாக இருந்தால்தான் அதன் மீது எழும்பும் கட்டடம் மிகவும் வலுவாக அமையும். அதுபோலத்தான் கல்வியின் ஆரம்பம்-தொடக்கம் சரியாக அமைந்துவிட்டால் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதுவே குழந்தைகளிடம் ஏற்படுத்திவிடும்.
இந்தச் சிந்தனையின் அடிப்படையில் முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வியின் வளர்ச்சியில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். புதிய திட்டங்களைத் தந்து குழந்தைகள் பள்ளிக்கு தொடர்ந்து வந்து கற்கும் சூழ்நிலையை மேம்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் முதலமைச்சர் உருவாக்கியுள்ள திட்டங்கள் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளன. குழந்தைகளும் கல்வியில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர்.
இதற்குத் துணை புரியும் திட்டங்கள் பல:
* புரட்சிகரமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்
* இல்லம் தேடிக் கல்வித் திட்டம்
* வாசிப்புப் பழக்கத்தை வளர்க்கும் திட்டம்
* எண்ணும் எழுத்தும்
* நுழை-நட-ஓடு-பற-திட்டம்
* காடு / மலைப்பகுதி குழந்தைகளுக்காகச் சிறப்பு வசதி
* தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள்
* இடைநிலை ஆசிரியர்களுக்கு கைக் கணினிகள்
* மாற்றுத் திறன் மாணவர்களுக்குத் தனி கவனம்
* நற்பண்புகளை வளர்க்கும் கதை நூல்கள்
* பேராசிரியர் அன்பழகனார் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்
* ஆசிரியர்கள் நியமனம்
* ஆசிரியர்களுக்கு அண்ணா தலைமைத்துவ விருது
இப்படிப் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதன் பயனாக அரசுத் தொடக்கப் பள்ளிகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. எனவேதான், கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழ்நாடு இந்தியாவில் சிறந்து விளங்குகிறது என்று முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் அனைவராலும் பாராட்டப்படுகிறார். இது பள்ளிக் கல்வித்துறையில் ஒரு புதிய சாதனையாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.